பதிவு செய்த நாள்
16
ஜூன்
2019
03:06
செங்கல்பட்டு: அனுமந்தபுரம் அகோர வீரபத்ரர் கோவிலில், ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம், நேற்று, கோலாகலமாக நடைபெற்றது. செங்கல்பட்டு அடுத்த, அனுமந்தபுரம் வீரபத்ரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவிலுக்கு, புதிதாக, ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதையடுத்து, 10ம் தேதி, கணபதி பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது.நேற்று காலை, 9:00 மணிக்கு, சர்வ சாதகம் துரைசாமி என்கிற பாபு குருக்கள் தலைமையில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின், கலசங்கள் புறப்பாடு முடிந்து, ராஜகோபுர கலசங்களுக்கு, அகோர வீரபத்ரர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், காலை, 10:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. வீரபத்ரர் சுவாமிக்கு, மஹா சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.திருப்பணி உபயதாரர் ரவிசந்திரன் உட்பட, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், செயல் அலுவலர்கள், சிவசண்முகபொன்மணி, செந்தில்குமார் மற்றும் பரம்பரை அறங்காவலர் காமேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.