பதிவு செய்த நாள்
21
ஜூன்
2019
11:06
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நான்காம் நாள் பூஜைகள் விமர்சையாக நடந்தது.
புதுச்சேரி -திண்டிவனம் சாலை பஞ்சவடீயில், 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதால், இக்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேங்கடாஜலபதி சன்னதி மற்றும் ராஜகோபுரம், மூலவர் சன்னதி கோபுரங்களுக்கு, வரும் 23ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடத்தப்பட உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த யாகசாலை பந்தலில், 37 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள், கடந்த 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 18ம் தேதி காலை 8:30 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், லட்சுமிநரசிம்மர் ஹோமம், தன்வந்திரி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், உற்சவர் சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலையில் அஜஸ்ர தீபாராதனை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை நடந்தது.19ம் தேதி காலை ஆச்சார்யார்கள் அழைப்பு, பகவத் பிரார்த்தனை, அகல்மஷ ஹோமம், பூதசுத்தி கும்ப பூஜை, வேத பிரபந்த பாராயணம் துவக்கம், மாலை 5:00 மணிக்கு புண்யாஹம், இயற்கையான முறையில், பட்டாச்சாரியார்களால் அரணி கட்டையில் இருந்து கடைந்து எடுக்கப்படும் சுத்த அக்னி கொண்டு யாக வேள்விக்கான அக்னி மதனம் நடந்தது.நான்காம் நாளான நேற்று காலை, சுப்ரபாதம், விஸ்வரூபம், திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி, புண்யாஹம், காலசாந்தி பூஜைகள் நடந்தது.
இன்று (21ம் தேதி) சுப்ரபாதம், விஸ்வரூபம், சேவா காலம், புண்யாஹம், காலசாந்தி பூஜை, மகாசாந்தி ஹோமம், உற்சவர் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீநிவாச திருமஞ்சனம் நடக்கிறது. மாலை, ராஜகோபுரம் கண் திறப்பு, கோ பூஜை நடக்கிறது. 22ம் தேதி மாலை, 6:00 மணிக்கு தசதரிசன பூஜைகள் நடக்கிறது.கும்பாபிஷேக தினமான 23ம் தேதி காலை 7:00 மணிக்கு புண்யாஹம், காலசாந்தி பூஜை, 8:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, பஞ்சாக்னி, 9:00 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது.காலை 10:00 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னதி விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.10:15 மணிக்கு, மூலவர்கள் மகா சம்ப்ரோக்ஷணம், மகா தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் செய்துள்ளது.