கொளத்தூர் அம்மன் கோவில் குளத்தில் பாதுகாப்பு சுவரில்லாததால் அபாயநிலை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2012 11:03
விழுப்புரம் : கொளத்தூர் கிராம கெங்கையம்மன் கோவில் குளத்தில் பாதுகாப்பு சுவர் இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயநிலை உள்ளது. கொளத்தூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்கள் பலர் விளையாடுகின்றனர். இந்த குளத்தை சுற்றியிருந்த கற்களால் ஆன பாதுகாப்பு சுவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. இது குறித்து கிராம மக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், கடந்தாண்டு அக்., மாதம் கெங்கையம்மன் கோவிலை சுற்றி கருங்கற்களால் ஆன பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி துவங்கியது. பணிகள் துவங்கப்பட்ட சில மாதங்களில் பலத்த மழை, சூறைக் காற்று ஏற்பட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. கோவில் குளத்தை சுற்றியுள்ள மணல் சரிவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விழுக்கூடிய அபாயநிலை நீடித்து வருகிறது. இப்பிரச்னையில் அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு, குளத்தில் பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணியை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.