சீமோன் என்பவனுக்கு இயேசுவின் மீது நம்பிக்கை கிடையாது. அவரிடம் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என எண்ணினான். அதற்காகவே தன் வீட்டிற்கு சாப்பிட அழைத்தான். ஆனால் விருந்தாளிக்குரிய மரியாதையை வழங்கவில்லை. மரியாள் என்பவள் இயேசு தங்கள் ஊருக்கு வந்திருப்பதை அறிந்தாள். வாசனைத் தைலத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அப்போது சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு ஒன்று, மனதில் ஓடியது. விபச்சாரம் செய்ததாக மரியாள் மீது குற்றம் சாட்டிய சிலர், இயேசுவின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ” தண்டனை கொடுப்பது அவசியமானதே. அனைவரும் இவள் மீது கல்லெறிய வேண்டும். ஆனால் உங்களில் யார் ஒருவர் பாவம் செய்யவில்லையோ, அவரே முதல் கல்லை வீச வேண்டும்” என்றார் இயேசு.
குற்றம் சாட்டிய கும்பல் வாய் திறக்கவில்லை. இயேசுவின் கால்களில் விழுந்த மரியாள் அழுதாள். அப்போது இயேசு, ”நான் உன் மீது கல் எறிய மாட்டேன். இனியாவது பாவச் செயல்களில் ஈடுபடாதே” என அனுப்பி வைத்தார். நன்றியுணர்வுடன் இயேசுவைக் கண்ட மரியாள் வணங்கினாள். அவரது பாதங்களில் வாசனைத் தைலத்தை ஊற்றினாள். இதைக் கண்ட சீமோன் சிரித்தான். ”இயேசுவே! ஒரு விலைமாது அளிக்கும் மரியாதையைக் கூட ஏற்கிறீரே?” என ஏளனம் செய்தான். ”பணக்காரர் ஒருவரிடம், ஒருவன் 50 வெள்ளிக்காசும், இன்னொருவன் 500 வெள்ளிக்காசும் கடன் வாங்கினர். ஆனால் இருவராலும் அதைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. பணக்காரர் கடனை தள்ளுபடி செய்தார். இப்போது சொல்...அந்த இருவரில் யார் பணக்காரர் மீது அதிக நன்றி காட்டுவர்?” என்று கேட்டார். ”சந்தேகமே இல்லை...500 காசு தள்ளுபடி பெற்றவர் தான்” என்றான் சீமோன். அதற்கு இயேசு, ”சரியாகச் சொன்னாய். நீயாகத்தான் என்னை விருந்துக்கு அழைத்தாய். நான் உள்ளே வரும் போது, என் கால்களைக் கழுவ தண்ணீர் தந்திருக்க வேண்டும். இந்த சாதாரண மரியாதை கூட நீ செய்யவில்லை. அவளோ என் கால்களில் வாசனைத் தைலத்தை தடவி துடைத்தாள். விருந்துக்கு அழைத்த உன்னை விட, இவள் செய்த செயலே உயர்வானது” என்றார். அன்புடன் நடப்பவரே ஆண்டவருக்கு விருப்பமானவர்.