பதிவு செய்த நாள்
19
மார்
2012
04:03
திருவிழா அழைப்பிதழ்களில் ததீயாராதனம் என்ற வார்த்தையைப் பார்த்திருக்கலாம். இதற்கு அன்னதானம் என்று மிகச் சாதாரணமாக பொருள் சொல்லி விடுகிறார்கள். இது மிகவும் அர்த்தமுள்ள வார்த்தை. ததீயா என்றால் கடவுளுடன் சம்பந்தப்பட்டவர் என்று பொருள். கடவுளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணவளிப்பதையே ததீயாராதனம் எனச் சொல்ல வேண்டும். அதாவது, ஏழைகளும், பூஜை செய்பவர்களும் இறைவனைச் சார்ந்தவர்கள் என எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு தேவையான உணவை அளிக்க வேண்டும். பசி என்ற சொல்லையே அகராதியில் இருந்து அகற்ற வேண்டும். பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமன், தன் அரண்மனைக்கு வரும் ஏழை பிராமணர்களுக்கு, உணவளிக்கும் போது சமையலறையை கவனிக்க போய்விடுவானாம். ஒரு சமயம், அவர்களது அரண்மனையில் நடந்த அன்னதானத்தில் 82 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை படைத்தனர்.
தேகம் செய்த பாக்கியம் சாதாரணமாக எல்லா ஜனங்களுக்குமே தெய்வ சிந்தனை இருக்கத் தான் வேண்டும். மனுஷ்ய ஜீவன் அந்தப் பெயருக்கு லாயக்காக இருக்க வேண்டுமானால் தனக்கு ஜீவ சக்தியைக் கொடுத்த சுவாமியைச் சிந்தித்து, அவன் அருள் வழிகாட்டுகிறபடி தான் ஜீவனம் நடத்த வேண்டும். இந்த (தெய்வ) சிந்தனை நாமே பண்ணுவதாக இருந்தால் நம்முடைய சித்தம் ஓடுகிற தாறுமாறான ஓட்டத்தில் உருப்படியாக ஒன்றும் தேறாது. அது மாத்திரமில்லாமல் நமக்கு சுவாமியைப் பற்றி சொந்த அனுபவமாக என்ன தெரியும்? நமக்குத் தெரியாதவரைப் பற்றி நாம் என்னத்தைச் சிந்திக்க முடியும்? இங்கே, அப்படித் தெரிந்து கொண்ட பெரியவர்கள் பாடிய ஸ்தோத்திரங்களும், தமிழ் முதலான பிரதேச பாஷைகளில் இருக்கிற துதிகளும்தான் நமக்குகை கொடுத்துத் தூக்கிவிட ஓடி வருகின்றன.
பலகாலமாக அவற்றை, சுவாமியை சொந்தத்தில் நேரில் தெரிந்து கொண்ட எத்தனையோ பேர் சொல்லிச் சொல்லி, அவற்றுக்கு தெய்வீக சக்தி கூடிக் கொண்டே வந்திருக்கும். அவற்றைச் சொல்வதே, அதாவது ஸ்தோத்ர பாராயணம், துதி ஓதுதல் என்பதே நம்முடைய சித்தத்தை சுவாமியிடம் சேர்த்து வைக்கும். நம் தேசம் செய்த பாக்கியம், இம்மாதிரி ஸ்துதிகள் ஒவ்வொரு தெய்வத்தையும் குறித்துக் கணக்குவழக்கு இல்லாமலிருக்கின்றன. நம் தேசத்திலும் இந்தத் தமிழ்நாட்டில் பிறந்தவர்களின் பாக்கியம் இங்கே தோன்றிய நம் முன்னோர்கள் நம்முடைய தமிழ் பாஷையில் துதிகளை அப்படியே கொட்டி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.