வேடசந்தூர்: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனும் சான்றோர் வார்த்தைக்கு இணங்க, தினமும் ஆயிரம் பேர் மனதையும், உடலையும் குளிர்விக்கிறார் ஒருவர் என்றால் அவர் யாரென அறிய ஆர்வம் பிறக்குதல்லவா? பிரதிபலனை எதிர்பாராமல் மனம் கோணாது, அள்ளி அள்ளி... ஊற்றி மனங்குளிரச் செய்கிறார் மவுனகுருசாமி மகன் வடிவேல்.
வேடசந்தூர் பூத்தாம்பட்டி ரோட்டில் மண்டபம் பஸ்ஸ்டாப் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி அடிகள் (மவுன குருசாமி) மகன்தான் அந்த வடிவேல். தந்தையின் நினைவாக மர நிழலில் 24 மணி நேரமும் இலவசமாக கம்பங்கூழ் வழங்கி வருகிறார். இவ்வழியாகச் செல்வோர் மர நிழலில் இளைப்பாறுவர். அப்போது கிடைக்கும் கம்பங் கூழ் அவர்களின் தொண்டைக்குள் இதமாக, பதமாக இறங்கி ஊட்டச்சத்துடன் நல்ல இளைப்பாறுதலை தருகிறது.
இதுபற்றி வடிவேல் கூறுவதை கேளுங்கள்: தினமும் 25 கிலோ கம்பை அரைத்து கூழ் தயாரிக் கிறோம். அதை பத்து பானைகளில் ஊற்றிவைத்து ஒரு நாள் புளிப்பு ஏற்றுகிறோம். மறுநாள் குளிர்ந்த, புளிப்புச் சுவையுடைய கம்பங்கூழை கரைத்து அண்டாக்களில் வைத்து வெயிலில் வரும் வழிப்போக்கர்களுக்கு வினியோகிக்கிறோம். இப்பகுதியில் நூற்பாலைக ளுக்கு செல்வோர், வயல் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வோர் என பலதரப்பினரும் கம்பங்கூழை விரும்பி குடிப்பர். தினமும் ஆயிரம் பேராவது இதனை பருகி பயன்பெறு கின்றனர். இரவிலும் அப்பகுதியில் படுத்திருப்பேன். இரவுப்பணி முடித்து வருவோர்கூட கம்பங்கூழை விரும்பி குடிக்கின்றனர். "மக்கள் சேவையே மகேசன் சேவை எனக்கருதி தொடர்கிறோம், என்றார். இவரை பாராட்ட 94886 38197ல் பேசலாம்.