திருப்புவனம்: திருப்புவனம் அருகே கலியாந்துார் அதிகமுடைய அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு குதிரை எடுப்பு விழா நடந்தது. மழை பொய்த்து கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மழை பெய்ய வேண்டி தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகள், திருவிழாக்கள் நடந்து வருகின்றன. கலியாந்துார் கிராமத்தில் மழை வேண்டி 11 வருடங்களுக்கு பிறகு அதிகமுடைய அய்யனாருக்கு குதிரை எடுப்பு திருவிழா நடந்தது. திருப்புவனம் வேளார் தெருவில் இருந்து கலியாந்துார் வரை 5 கி.மீ., துாரத்திற்கு குதிரையை எடுத்து கொண்டு கிராம மக்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு முன் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குதிரைகளுக்கு புது வேட்டி துண்டு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருமணம் ஆகாத இளைஞர்கள் புரவியை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்த பெண் பக்தர்கள் பொம்மையை ஏந்தியபடி வலம் வந்தனர். குதிரை எடுப்பு திருவிழா குறித்து கிராம மக்கள் கூறியதாவது: ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு வருடம் தோறும் புது புரவி செய்து வைத்து வணங்குவது வழக்கம். அப்போது தான் மழை பெய்து கிராம மக்கள் நோய் இன்றி வாழ அய்யனார் ஆசி வழங்குவார் என்பது ஐதீகம். 11 ஆண்டுகளுக்கு பிறகு அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்தியுள்ளோம், என்றனர்.