மதுரை :மதுரை தல்லாகுளம் நவநீதகிருஷ்ணன் கோயிலை, இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பம் அருகே, 40 ஆண்டுகளுக்கு முன் நவநீதகிருஷ்ணன் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலை குறிப்பிட்ட சமூகத்தினர் நிர்வகிக்க முடிவு செய்தனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க, பிரச்னை கோர்ட்டிற்கு சென்றது. இதற்கிடையே, அர்ச்சகர்களிடமிருந்து சாவியை பெற்ற சிலர், கோயிலை பூட்டிவிட்டு, "நிர்வாக காரணங்களுக்காக நடை திறக்கப்படமாட்டாது என நோட்டீஸ் ஒட்டினர். தல்லாகுளம் போலீசில், அர்ச்சகர் வைத்தியநாதன் புகார் செய்தார். சாவியை கொடுக்கும்படி, போலீசார் கூறியும் இதுவரை தராததால், மூன்று நாட்களாக கோயில் திறக்கப்படாமல் உள்ளது. பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அர்ச்சகர் வைத்தியநாதர் கூறியதாவது : கோயிலை யார் நிர்வகிப்பது என்ற பிரச்னையில் நடையை சாத்தியுள்ளனர். எங்களை, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர், என்றார். இதற்கிடையே, மாநகராட்சி இடத்தில் உள்ள இக்கோயிலை இந்துசமய அறநிலையத்துறை நேற்று கையகப்படுத்தியது.