பதிவு செய்த நாள்
13
ஜூலை
2019
12:07
நாவலுார்: நாவலுாரில் சிதிலமடைந்துள்ள, ஏகாம்பர நாதேஸ்வரர் கோவிலைச் சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
படப்பை அருகே, செரப்பணஞ்சேரி ஊராட்சி, நாவலுார் கிராமத்தில், பழமை வாய்ந்த, காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர நாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இரண்டு நந்திகள் இருப்பது, வேறு எங்கும் காண முடியாத சிறப்பு.பல ஆண்டுகளாக, பராமரிப்பு இன்றி காணப்படும் இக்கோவிலின், காமாட்சி அம்மன் சன்னிதி மீது, மரங்கள் வளர்ந்து, கோபுரம் சேதமடைந்துள்ளது. ஏகாம்பர நாதேஸ்வரர் சன்னிதி கோபுரம் மீது, 4 அடி உயரத்திற்கு மரம் வளர்ந்து வருவதால், கோபுரம் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது: ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், பராமரிக்கப்படுவதே இல்லை. கோவிலுக்குச் சொந்தமான நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த கோவிலை சீரமைத்து, பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.