பதிவு செய்த நாள்
13
ஜூலை
2019
12:07
காஞ்சிபுரம்: ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்தி வரதரை, நேற்று, குடும்பத்துடன் தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், விமரிசையாக நடைபெறும் அத்தி வரதர் வைபவத்தை, தினமும், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கின்றனர்.இந்நிலையில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், நேற்று மதியம், டில்லியிலிருந்து தனி விமானம் மூலம், சென்னைக்கு வந்தார்.
அங்கிருந்து, ஹெலிகாப்டரில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி மைதானத்திற்கு, 2:50 மணிக்கு வந்தார். உடன், அவரது குடும்பத்தினரும் வந்தனர்.பாதுகாப்புக்காக, மேலும் இரு ஹெலிகாப்டர்கள், பச்சையப்பன் கல்லுாரி வளாகத்தில் இறங்கின.தொடர்ந்து, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, 3:10 மணிக்கு, ஜனாதிபதி வந்தார். உடன், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் உள்ளிட்டோர் வந்தனர்.கோவில் பட்டாச்சாரியார்கள், ஜனாதிபதியை, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின், வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த அத்தி வரதரை, ஜனாதிபதி, அவரது குடும்பத்தினர், தரிசனம் செய்தார்.பின், 3:25 மணிக்கு, கோவிலில் இருந்து காரில் புறப்பட்டு, மீண்டும், பச்சையப்பன் கல்லுாரி மைதானத்திற்கு சென்று, ஹெலிகாப்டரில் சென்னைக்கு புறப்பட்டார். டி.ஜி.பி., திரிபாதி தலைமையிலான, 2,000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஏமாற்றம்: ஜனாதிபதியை, பூங்கொத்து கொடுத்து வரவேற்க, அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., பன்னீர்செல்வம், அமைப்பு செயலர் சோமசுந்தரம் ஆகியோர், கோவில் வெளியே காத்திருந்தனர். ஜனாதிபதி வருவதற்கு, சில நிமிடங்களுக்கு முன், அ.தி.மு.க., நிர்வாகிகளை, போலீசார், அங்கிருந்து அழைத்து சென்றனர். பூங்கொத்து கொடுக்க அனுமதி அளிக்கப்படாததால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.