பதிவு செய்த நாள்
22
மார்
2012
11:03
ஈரோடு : ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் உள்ள மூன்று கண்காணிப்பு கேமராவும் செயல்படாமல் பழுதடைந்துள்ளன. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று பூச்சாட்டுடன் துவங்கியது. அடுத்த ஒரு மாதத்துக்கு, ஈரோடு மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில், அம்மனின் அருள் பெறக்குவிவர். கோவிலுக்கு வரும் பக்தர்களை, கொள்ளையர்கள், சில்மிஷ பேர்வழிகளிடமிருந்து காக்க, சில ஆண்டுக்கு முன் மூன்று கண்காணிப்பு கேமராக்கள் கோவிலில் பொருத்தப்பட்டன. கோவில் அலுவலகத்தில் இருந்தவாறே, பக்தர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், பல மாதங்களாக கோவில் கண்காணிப்பு கேமரா செயலற்று கிடக்கிறது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோவில் திருவிழா துவங்கியுள்ள நிலையில், கண்காணிப்பு கேமராவை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல்அலுவலர் சுப்பிரமணியன் கூறுகையில், ""பழுதான கேமராவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலில் கம்பம் நடும் முன், கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது, என்றார்.