பதிவு செய்த நாள்
22
மார்
2012
11:03
அவிநாசி : கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, அடுத்த மாதம் 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது; ஏப்., 11, 12, 13 ஆகிய தேதியில் தேரோட்டம் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் கருவலூர் மாரியம்மன் கோவில் பழமை வாய்ந்தது. கண் தொடர்பான நோய்களுக்கு அங்கு சென்று தீர்த்தம் பெற்றால், நோய் குணமாகி விடுவதாக ஐதீகம். அக்கோவில் தேர்த்திருவிழா அடுத்த மாதம் 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 8ம் தேதி பூத வாகனம், 9ம் தேதி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சி நடக்கிறது. அடுத்த மாதம் 10ம் தேதி புஷ்ப விமானம் மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு, தொடர்ந்து திருக்கல்யாண உற்வசம், யானை வாகன காட்சி நடக்கிறது. 11ம் தேதி காலை 6.00 மணிக்கு மாரியம்மன் தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலை 6.00 மணிக்கும், மறுநாளும், 13ம் தேதி இரவும் தேரோட்டம் நடக்கிறது. 14ம் தேதி தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 15ம் தரிசன காட்சி, அம்பாள் சப்பரத்தில் புறப்பாடு, இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா, மஞ்சள் நீர் விழா மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது. 18ம் தேதி காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம், மறுபூஜையுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணபவன், அறங்காவலர் குழு தலைவர் அர்ச்சுணன், அறங்காவலர்கள் அவிநாசியப்பன், தமிழ்ச்செல்வன், ரங்கசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.