செய்யதுனா ஈஸா என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் சிலர், வாடிய முகத்துடன் இறைவனை வணங்கிக் கொண்டிருந்தனர். “ஏன் இப்படி இருக்கிறீர்கள்?” எனக் கேட்டார். “நாங்கள் நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ள உடலை வருத்தி இறைவனை வணங்குகிறோம்” என்றனர். “நரக நெருப்புக்கு அஞ்சியாவது இறைவனை வணங்குகிறீர்களே! உங்களை இறைவன் காப்பானாக” என்று சொல்லி நடந்தார்.
இன்னொரு இடத்தில் உடல் இளைத்த சிலர் இறைவனை வணங்குவதைக் கண்டார். “நாங்கள் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆசையால், உடலை வருத்தி வணங்குகிறோம்” என்றனர்.
அதற்கு ஈஸா,“கவலை வேண்டாம். வணக்கத்தினால் தான் சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்றில்லை. ஆனாலும் இறைவன் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவான்” என பிரார்த்தித்தார். தொடர்ந்து நடந்தார். ஓரிடத்தில் சிலர், மனதில் சலனம் இன்றி நின்றிருந்தனர். “நீங்கள் யார்? உங்கள் நிலைக்கு என்ன காரணம்?” என கேட்டார். அவர்கள் ஈஸாவிடம்,“நாங்கள் நரகத்திற்கு பயப்படவும் இல்லை. சொர்க்கத்தை விரும்பவும் இல்லை. இறைவனின் விருப்பப்படி எது கிடைத்தாலும் ஏற்போம். ஆனால் இறைவனின் அன்பு எங்கள் உள்ளத்தில் ஆட்சி செய்கிறது” என்றனர். அதைக் கேட்டு ஈஸா மகிழ்ந்தார்.“சுயநலமன்றி இறைவனை வணங்கும் நல்லவர்கள் நீங்களே! இறைவன் உங்கள் அருகில் இருக்கிறான்” என்று சொல்லி விட்டு புறப்பட்டார்.