பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
04:07
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில் எங்கும் திருவிழா மயம் தான். கூழ் வார்ப்பது, கஞ்சி காய்ச்சுவது, நேர்த்திக் கடன் செலுத்துவது என பக்தர்கள் பெருமளவில் கூடும் அம்மன் தலமான படவேடு ரேணுகாதேவியை இந்த நேரத்தில் தரிசிப்போம். திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு அருகிலுள்ள தலம் படவேடு. வேலூர் – திருவண்ணாமலை சாலையில் 32 கி.மீ., துாரத்தில் சந்தவாசல். அங்கிருந்து 6 கி.மீ., வேலூர், ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை, போளூர், காஞ்சிபுரத்தில் இருந்தும் பஸ் வசதி உண்டு. இயற்கை எழில் மிகுந்த ஜவ்வாது மலைத் தொடரின் நடுவிலுள்ள இங்கு மாரியம்மன் வடிவில் ரேணுகாதேவி குடியிருக்கிறாள். அம்மனின் பிரசாதமாக குறிப்பிட்ட இடத்தில் வெட்டி எடுக்கப்படும் மண்ணே விபூதியாக தரப்படுகிறது. எந்த இடத்தில் மண் எடுக்கிறார்கள் தெரியுமா? ரேணுகாதேவியின் கணவர் ஜமதக்னி முனிவர் தவம் செய்த இடம் தான் அது. கோயிலில் இருந்து சற்று தொலைவில் முனிவரின் ஆஸ்ரமம் உள்ளது. ஆனி திருமஞ்சனத்தன்று மட்டுமே இந்த மண்ணை வெட்டி எடுப்பர். பிரசாதமான இது, வயிற்று வலி உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் நீரில் கலந்தும் சாப்பிடுவர். ஜமதக்னி முனிவர் – ரேணுகாதேவி தம்பதியின் மகன் பரசுராமர். இவர், கலைகளில் சிறந்தவனான கார்த்த வீர்யார்ஜுனன் என்பவரைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார். அதற்காக புனித நதிகளில் நீராட யாத்திரை கிளம்பினார். இதற்கிடையில் கார்த்த வீர்யார்ஜுனனின் வாரிசுகள் ஜமதக்னி முனிவரைக் கொன்றனர்.
கணவரை இழந்த ரேணுகாதேவியும் உயிர் துறக்க தீ மூட்டினாள். ’இந்த உலகையே காக்க அவதரித்தவள் ரேணுகா’ என்பதை உணர்ந்த தேவர்கள் மழை பெய்ய வைத்தனர். ஆனாலும் ரேணுகாவின் உடலில் தீ லேசாகப் பட்டதால் ஆங்காங்கே கொப்புளம் வெடித்தது. ஆடையிலும் தீப்பட்டு கருகியது. அதனால் அருகில் இருந்த வேப்ப மரத்தின் கிளைகளை வெட்டி ஆடையாகக் கட்டினாள். அங்கிருந்த குடிசை வாழ் மக்களிடம் தஞ்சம் புகுந்தாள். உபசரித்த அவர்கள், தங்களது வீட்டில் இருந்த பச்சரிசியை உரலில் இட்டு மாவு இடித்தனர். அதில் வெல்லம் கலந்து கொடுத்தனர் தாகம் தணிக்க வெல்லம், புளி கலந்து பானகம் குடிக்கக் கொடுத்தனர். படவேடு ரேணுகாதேவி கோயிலில் மாவும், பானகமும் தான் முக்கிய நைவேத்தியம்.
அங்கிருந்து கிளம்பிய ரேணுகாவுக்கு இன்னொரு ஏழைக் குடும்பத்தினர் ஆடை கொடுத்தனர். தனக்கு ஏற்பட்ட நிலையை மகனான பரசுராமருக்குத் தெரிவிக்க நினைத்தாள் ரேணுகா. அடுத்த நொடியே பரசுராமர் அங்கு தோன்றினார். தாய் மூலம் நடந்ததை எல்லாம் அறிந்த பரசுராமர் எதிரிகளை பூண்டோடு அழித்தார்.
பரசுராமரின் கோபத்தை இனியும் உலகம் தாங்காது எனத் தீர்மானித்த மும்மூர்த்திகளும் பூமிக்கு வந்தனர்.“பரசுராமா... கோபத்தைக் கைவிடு. விதியை மாற்ற முடியாது. உன் தாய்க்குரிய பணி பூலோகத்தில் இருக்கிறது. கவலை வேண்டாம். உன் தந்தையார் ஜமதக்னி முனிவரை உயிர்ப்பிக்கிறோம். உன் தாயாரும் முன்பு இருந்த பழைய நிலையை அடைவார்” என ஆசியளித்தனர். சிவபெருமானை வணங்கிய ரேணுகா,“ சுவாமி! எனக்கு ஒரு வரம் வேண்டும்” எனக் கேட்க, அவரும் சம்மதித்தார்.
“என்னை உபசரித்த மக்கள் என்றைக்கும் என் தலையை பூஜித்து மேன்மை அடைய வேண்டும். என் கணவருக்குப் பணிவிடை செய்த இந்த உடம்பு அவரோடு
சேர்ந்து சொர்க்கத்தை அடைய வேண்டும்” என்றாள்.“அப்படியே அருளினோம்” என வரமளித்தார் சிவன். பின்னர் மும்மூர்த்திகளும் அங்கிருந்து மறைந்தனர்.
அந்த வரத்தின்படி ரேணுகாவின் தலை மட்டும் படவேடு கோயிலில் உள்ளது. கருவறையில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் அரூபமாக அருள்கின்றனர்.
ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கம், ஸ்ரீசக்கரம் இங்குள்ளது. எனவே, இங்கு வழிபட்டவருக்கு மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். படவேடு கோயிலில் ரேணுகாதேவியின் சிரசு (தலை) மட்டும் சுயம்புமூர்த்தியாக உள்ளது. சுதையால் ஆன அம்மனின் திருவுருவம், பரசுராமர் சிலையும் கருவறையில் உள்ளன. ஆடி மற்றும் தை மாதங்களில் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் திரளாக கூடுவர். நவராத்திரி, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நாட்களில் கூட்டம் அலைமோதும். அம்மை நோய் கண்டவர்கள் வேப்பிலை தீர்த்தத்தை பிரசாதமாக பெற்றுச் செல்கிறார்கள். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் பிரச்னை தீரும். திருமணம், குழந்தைப்பேறுக்காக பெண்கள் அன்னையின் முன் மடிப்பிச்சை கேட்டு வழிபடுவர்.
வரங்களை அள்ளித் தருவதில் ரேணுகாதேவிக்கு இணை யாருமில்லை. அருள் நிறைந்த ஆடியில் அன்னை ரேணுகாதேவியை தரிசித்து ஆனந்தம் பெறுவோம்!