ராமநாதபுரத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் அம்மன் கோயில்களில் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2019 02:07
ராமநாதபுரம் : ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள அம்மன் கோயில் களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.ஆடி மாதம் அம்மனுக்கு ஏற்ற மாதம். இந்த மாதத்தின் வெள்ளிக்கிழமைகள் விசேஷ நாட்களாகும்.
இந்த நாட்களில் அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தும், வேப்பிலை மஞ்சள் அரைத்து பூசியும் வழிபடுவது சிறப்பான பலனை தரும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளி நாட்களில் விளக்கு ஏற்றி வழிபடுவதால் ஆரோக்கியம் பெருகும். இந்த நாட்களில் அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பெண்கள் இணைந்து குத்துவிளக்கு பூஜை நடத்துவார்கள். நேற்று 19ல், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பல பகுதிகளிலுள்ள அம்மன் கோயில் களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெண்கள் நெய், எழுமிச்சை உள்ளிட்ட தீபங்கள் ஏற்றி அம்மனை வழிபட்டனர். ஆடிவெள்ளியை முன்னிட்டு கோயில்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
அல்லி கண்மாய் ராஜமாரியம்மன் கோயில், மல்லம்மாள் கோயில், வெட்டுடையாள் காளி அம்மன் கோயில், பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட பல அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.
*கீழக்கரை, தட்டார் தெருவில் உள்ள உக்கிரவீரமா காளியம்மன் கோயிலில் முதல் வார ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பெண்கள் சக்தி ஸ்தோத்திரம், பஜனை, நாமாவளியை பாடினர். சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்குகூழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விஸ்வ ஐக்கிய தங்கம் வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.