பதிவு செய்த நாள்
24
ஜூலை
2019
02:07
ஈரோடு: ஈரோடு, கோட்டை பகுதியில், ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதர் என, பிரசித்தி பெற்ற இரண்டு கோவில் உள்ளன. இரு கோவில்களிலும் பல்வேறு விழாக்கள், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இதில்லாமல், சனி, வெள்ளி, செவ்வாய் கிழமைகளில், இரு கோவில்களிலும், பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கூட்டம் சேரு மளவுக்கு, பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, சரியான இடவசதியில்லை. கோவில் முன், சாலையில் நிறுத்திச் செல்கின்றனர். இதனால் தெப்பகுளம் வீதி, பத்ரகாளியம்மன் கோவில் வீதி, கிழக்கு பெருமாள் கோவில் வீதி, உள்ளிட்ட பகுதி வீடுகள், ஜவுளி நிறுவனங்களுக்கு வரும் மக்கள், வேன், மாட்டுவண்டிகள், போக்குவரத்து நெருக்கடியில் சிக்கும் நிலை வாடிக்கையாக உள்ளது.
அதேசமயம், தரிசனம் முடிந்து வரும் பக்தர்களும், வண்டியை எடுக்க முடிவதில்லை. எனவே, கோவிலுக்கென, பார்க்கிங் வசதி ஏற்படுத்த, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வைத்து ள்ளனர். மேலும், கோவில் வழியாக, வேன், மாட்டு வண்டிகள் செல்ல, தடை விதிக்க வேண்டும் என்பதும், பக்தர்கள் கருத்தாக உள்ளது. இதுகுறித்து கோவில் தரப்பில் கேட்ட போது, ’பக்தர்கள் வாகனங்களை நிறுத்த, அருகிலுள்ள மாநகராட்சி பள்ளியில் இடம் கிடைத்தால் வசதியாக இருக்கும்’ என்றனர்.
கோவிலுக்கு சொந்தமாக தெப்பகுளம் வீதியில் இடம் இருந்தது. அந்த இடத்தில், செயற்கை குளம் அமைத்து விட்டு, பள்ளி இடத்தை கேட்டால் எப்படி கிடைக்கும்? என்று, பக்தர்கள் தரப்பில் கேள்வி எழுந்துள்ளது. செயற்கை தெப்பகுளத்தை சுற்றி, காலியாக உள்ள இடத்தில், பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கலாம் என்று, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.