பதிவு செய்த நாள்
26
ஜூலை
2019
02:07
மதுரை, ”நதி நீர் இணைப்பிற்கு ஏதுவாக அனைத்து நதிகளையும் தேசியமயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என மதுரை வைகை பெருவிழா துறவியர் மாநாட்டில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா வலியுறுத்தினார்.
நதிகளின் புனிதம் காக்கவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அகில பாரதிய சன்னி யாசிகள் சங்கம் சார்பில் ’வைகை பெருவிழா 2019’ மதுரை புட்டுத்தோப்பில் நேற்று முன்தினம் (ஜூலை., 24ல்) துவங்கியது.நேற்று (ஜூலை., 25ல்) நடந்த துறவியர் மாநாட்டிற்கு ராம கிருஷ்ண மடம் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தலைமை வகித்தார்.
சுவாமிகள் கிருஷ்ணானந்தா, ரிபுவானந்தா முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை விளக்கி சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது:நீர் வளத்தை பாதுகாக்க மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களில் தனியே நீர் சக்தித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சகம் ஏற்படுத்தியது போல் தமிழகத்திலும் தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். நதிநீர் இணைப்பிற்கு ஏதுவாக அனைத்து நதிகளையும் தேசியமயமாக்க வேண்டும். வைகைக்கரை படித்துறை ஒன்றில் வைகை அன்னைக்கு கோயில் எழுப்ப வேண்டும்.
வைகை நதி உற்பத்தியாகும் மேகமலை வனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மண்டலமாக அறிவிக்க வேண்டும். துறவியர் மகா சமாதியடைந்து விட்டால் அவர்களுக்கு என தனியே மகா சமாதி கிரியைகள் செய்வதற்கு ஏதுவாக திருவண்ணாமலையில் அமைதி ப்பூங்கா அமைக்க தனி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோயில் வழிபாட்டில் துறவியர் களுக்கு முன்னுரிமை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வலியுறுத் தினார்.சுவாமிகள் சிவானந்த சுந்தரானந்தா, ராமானந்தா, செண்டலங்கார செண்பக ஜீயர், ஆத்மானந்தா, வேதாந்த ஆனந்தா, ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், சாதனா குழுமப் பள்ளிகள் இயக்குனர் நடனகுருநாதன், மகாராஷ்டிரா வி.எச்.பி., செயலர் சங்கர் காய்கர், பல்வேறு மடாலய குரு மகா சன்னிதானங்கள், சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர். சுவாமி ராகவானந்தா நன்றி கூறினார்.