பதிவு செய்த நாள்
26
ஜூலை
2019
02:07
வேலூர்: ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி திருத்தணிக்கு, 300 சிறப்பு பஸ்கள் இயக்கப் படுவதால், காஞ்சிபுரத்துக்கு இயக்கப்பட்ட கூடுதல் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
ஆடி கிருத்திகை திருவிழா இன்று (ஜூலை., 26ல்) நடக்கிறது. இதையொட்டி, திருத்தணி முருகன் கோவிலுக்கு வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், குடியாத்தம், வேலூர், ஆற்காடு, ஆம்பூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் இருந்து, வேலூர் கோட்டத்தை சேர்ந்த, 300 அரசு சிறப்பு பஸ்கள் வரும், 28 வரை இயக்கப்படுகின்றன. இது தவிர, வேலூர் மாவட்டத்தில் உள்ள, ரத்தினகிரி, வள்ளிமலை முருகன் கோவிலுக்கு தலா, 25 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், காஞ்சிபுரத்துக்கு கூடுதலாக இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து வேலூர் கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆடி கிருத் திகையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணிக்கு செல்வதால், அதிகளவு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு, காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க, 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்பட்டன. தற்போது, அதில், 300 பஸ்கள் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு மாற்றி இயக்கப்படுகின்றன. வரும், 30 முதல் வழக்கம் போல, காஞ்சிபுரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். குறைந்த எண்ணிக்கையில் காஞ்சிபுரத்துக்கு பஸ்கள் இயக்கப்படுவதால், அத்திவரதரை தரிசிக்க, வேலூரிலிருந்து, அரசு பஸ்களில் செல்லும் பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.