கார்த்திகை தீபத்திருவிழா; மலை கோயில்களில் மகா தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2025 12:12
தேனி: தேனி மாவட்டத்தில் சிவன், முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மலைக்கோயில்களில் மகா தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
தேனி பெத்தாட்சி விநாயகர் கோவில், பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோவில், என்.ஆர்.டி.,நகர் சிவகணேச கந்த பெருமாள் கோவில், தேனி புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்பலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காத்தில் காட்சியளித்தார். கோவில் பிரகாரங்களில் மாலையில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். மாலை சர்பலிங்கேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
தேனி வயல்பட்டி ஸ்ரீராமபுரம் அனுமந்தராய பெருமாள் கோயில் பவித்ரோத்ஸவ விழா துவங்கியது. ஓராண்டில் பூஜை செய்யும் பலன் பக்தர்களுக்கு கிடைக்கும் வண்ணம் ஆண்டுதோறும் ஆடி முதல் கார்த்திகை மாத உற்ஸவ நாட்களில் விழா நடந்து வருகிறது. நவ.30 முதல் டிச., 3 வரை தினமும் 90 வகையான பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று மன்னார்குடி பிரசன்னா தீட்சிதர் தலைமையில் 20 பேர் நித்ய ஹோமங்கள் நடத்தி, மஹா கும்ப திருவாராதன பூஜைகள் நடந்தன. அதன் பின் சாமி புறப்பாடு, தீருமஞ்சனம், தீர்த்தவாரி நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டன. பின் மூலவர், உற்ஸவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் கோயில் நுழைவாயில் முன் தீபத்துாணில் மகா திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் வயல்பட்டி, சத்திரப்பட்டி, வீரபாண்டி பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் திருக்கார்த்திகை சிறப்பு பூஜை நடந்தது. உற்ஸவர் பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். மூலவர் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயில், ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
பெண்கள் குத்துவிளக்கு பூஜை ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலைப்பர் கோயில். இங்குள்ள மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் சுனையில் நீராடி வேலப்பரை வழி விடுவதால் தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று பல்வேறு கிராமங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காவல் தெய்வம் கருப்பசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சக்கம்பட்டி கல்கோவில் வளாகத்தில் ராஜ விநாயகர் கோயிலில் திருக்கார்த்திகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அன்னதானம் நடந்தது. பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடந்தது.
கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே தங்கம்மாள்புரத்தில் ஓம் ஸ்ரீ பவள குன்றீஸ்வரர் கோயிலில் 19ம் ஆண்டு தீபத் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக பராசக்தி விநாயகர் கோவிலில் இருந்து பரணி தீபம், திருவாசக திருமுடி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
கண்டமனூர் அருகே கணவாய்பட்டி சன்னாசியப்பன் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு தீபாராதனை, நெய் தீப வழிபாடு, மலை உச்சியில் தீபம் ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். மழையிலும் தீபம் ஏற்றி வழிபாடு மூணாறு: மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா மழையிலும் சிறப்பாக நடந்தது. இந்த கோயிலில் பழநி தண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் பூஜை உள்பட ஐதீகங்கள் தவறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று கார்த்திகை திருவிழா வெகுசிறப்பாக நடந்தது. பழைய மூணாறில் உள்ள பார்வதியம்மன் கோயிலில் இருந்து காலையில் பால் குடம் எடுத்து வரப்பட்டு முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன.
கோயிலில் பஜனை பாடல் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. மாலையில் கோயில் அருகில் உள்ள மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோயில் சார்பில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் நடந்த தேர் பவனியில் உற்சவ மூர்த்தி முருகன், வள்ளி, தெய்வானையுடன் அருள் பாலித்தார். அலர்ட்: இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. அதனால் மூணாறில் மிதமாக மழை பெய்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தனர். அரோகரா கோஷம் முழங்கி வழிபாடு போடி: போடி பரமசிவன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா செயல் அலுவலர் நாராயணி தலைமையில் நடந்தது. நகரில் இருந்து பார்த்தால் ஜோதி தெரியும் படி சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை பேரவை சார்பில் 115 கிலோ எடை உள்ள திரி மூலம் 702 லிட்டர் நெய் ஊற்றி அரோகரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. சிவனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகளை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சிவனின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை சிங்கார வேலன் பழனி பாதயாத்திரை பேரவை குருநாதர் சுருளிவேல், தலைவர் ஜெயராம், துணைத்தலைவர் முருகன், செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் செந்தில்குமார் செய்திருந்தனர். போடி கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் அரோகரா கோஷத்துடன் மகா தீபமும், சொக்கப்பனை ஏற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபராதனைகள் நடந்தது. போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள சிவனுக்கு மகா தீபம், சொக்கப்பனை ஏற்றும் விழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனை கள் நடந்தது. போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்து உள்ள கைலாய மேலச்சொக்கநாதர் கோயில், வினபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. மகா தீபம் ஏற்றி வழிபாடு பெரியகுளம்: கைலாசநாதர் மலைக்கோயிலில் மகா கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. ரிஷப கொடியேற்றுதல் பாலதீபம் ஏற்றப்பட்டது. மூலவர் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.
500 கிலோ நெய் ஊற்றிய கொப்பரையில் மகா தீபத்தை அர்ச்சகர் சுவாமிநாதன் ஏற்றினார். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு கவுரவ ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி, செயல் அலுவலர் சுந்தரி,நகராட்சி முன்னாள் தலைவர் ராஜா, தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேவதானப்பட்டி மலைமேல் பரமசிவன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.