பதிவு செய்த நாள்
26
ஜூலை
2019
03:07
நாகர்கோவில்: தென்தாமரைகுளத்தில் கோவில் பூட்டை உடைத்து கருவறையில் அம்மன் சிலையின் மீதிருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமரி மாவட்டம், தென்தாமரைகுளத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு நடையடைப்பது வழக்கம். நேற்று முன்தினம் (ஜூலை., 24ல்) இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டிய பூசாரி பன்னீர்செல்வம்,45, நேற்று (ஜூலை., 25ல்) காலை கோவில் திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார்.
மேலும், கருவறையில் அம்மன் சிலையில் அணிந்திருந்த நகைகளும் திருடப்பட்டிருந்தது. இது குறித்து ஊர் தலைவர் பார்த்தசாரதியிடம் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. கன்னியாகுமரி டி.எஸ்.பி., பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
கோவில் கண்காணிப்பு கேமராவில்(சிசிடிவி) பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு 1 மணிக்கு 5 நபர்கள் கோவில் உள்ளே வருவதும், கேமராவை வேறு பக்கமாக திருப்பி வைப்பதும் பதிவாகியிருந்தது.
கருவறைக்குள் இருந்த லாக்கர் பெட்டியை திறக்க நடந்த முயற்சி தோல்வியடைந்ததால், அம்மன் சிலைகள் மீதிருந்த பொட்டு, கண் உருவம், காதணி போன்ற தங்க நகைகளுடன் அவர்கள் சென்று விட்டனர். லாக்கரை உடைக்க முடியாததால், அதிலிருந்த 75 பவுன் தங்க நகைகள் தப்பின.
இந்த சம்பவம் தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.