திருநெல்வேலி : வண்ணார்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வண்ணார்பேட்டை உண்ணாமலை அம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரதோஷம், சதூர்த்தி விழா, சஷ்டி,சிவராத்திரி போன்ற பல்வேறு ஆன்மிக விழாக்கள் நடந்து வருகிறது. இங்குள்ள ஐவர் சன்னதியில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. கோயில் வளாகத்தில் உள்ள ஐவர் சன்னதியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் மற்றும் தெய்வசேக்கிழார் ஆகியோரின் விக்ரகங்களுக்கு மருந்து சாத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் கோயில் பிரகாரத்தில் துர்க்கை அம்பாளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த இரு நாட்களாக 3 கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 10 மணிக்கு ஐவர் சன்னதியில் உள்ள சுவாமிகள் மற்றும் அம்பாளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. கோயில் அறங்காவலர் குழுத்தலைவர், பொருளாளர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.