பதிவு செய்த நாள்
26
மார்
2012 
11:03
 
 காங்கேயம்:காங்கேயம் அருகே சிவன்மலையில், அனுமந்தராயன் ஆஞ்சநேயர் கோவிலில் ஒரு கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் கிரிவலப்பாதையில் பழைமையான அனுமந்தராயன் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.ஆஞ்சநேயர் சீதாதேவியை இலங்கையில் இருந்து மீட்க செல்லும் முன் இங்கு சிவனை வழிபட்டு சென்றதாக வரலாறு கூறுகிறது. கோவிலில் மூலவர் அனுமந்தராயன், விநாயகர், பைரவர், தட்ஷணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சுரியன் சன்னதிகள் உள்ளன. அனைத்து சன்னதிகளும் புதிதாக அமைக்கப்படுகிறது.இக்கோவிலில் அர்ச்சகர்கள் மூலம் சைவ முறையில் பூஜைகள் நடக்கிறது. சனிஸ்வரன் பரிகார ஸ்தலமாக உள்ளதால், தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். கோவில் சிதிலமடைந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கி, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகிறது. மூலவர் ஆஞ்சநேயர் சன்னதி, அர்த்த மண்டபங்களுக்கான கல்காரப்பணிகள் முடிந்து, மூலவர் சன்னதியில் மூன்றடுக்கு விமான பணியும் முடிவடைந்துள்ளன.தற்போது மகாமண்டப பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பரிவார தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் அமைக்கப்படுகிறது. இன்னும் நெய் மண்டபம், நுழைவு வாயில் ஆர்ச் போன்ற பணிகள் நடக்க உள்ளன. திருப்பணிக்குழு தலைவர் சிவாசலபதி செட்டியார் கூறியதாவது: பழைமையான அனுமந்தராயன் கோவிலில், ஆறு மாதங்களுக்கு முன் திருப்பணிகள் துவங்கியது. தற்போது மூலவர் சன்னதி, அர்த்தமண்டபம், மூலவர் சன்னதியில் விமான பணி முடிந்துள்ளது. மகா மண்டபம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடக்கிறது. பக்தர்கள் நன்கொடை மூலம் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் பரிவார தெய்வங்களுக்கான சன்னதிகள், மணி மண்டபம், நெய் மண்டபம், நுழைவு வாயில் ஆர்ச் ஆகிய பணிகளை நடக்கிறது. வரும் தை மாதத்துக்குள் பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறோம். தவிர சிவன்மலை சுப்பிரமணியஸ்வாமி கோவிலில் கிரிவலத்தை சுற்றி நான்கு இடங்களில் இருந்த மயில் வாகன மண்டபம் சிதிலமடைந்திருந்ததால், அவற்றை அகற்றிவிட்டு, புது மயில்வாகன மண்டபம் அமைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.