புதுக்கோட்டை: புதுக்கோட்டை, பிரகதாம்பாள் கோவிலில், ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டத்தின் போது, வடக்கயிறு அறுந்ததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம், பிரகதாம்பாள் கோவிலில் வீற்றிருக்கும் பிரகதாம்பாள் அம்மன், புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்த, தொண்டைமான் மன்னர்களின் குலதெய்வம்.இக்கோவிலில், ஆண்டுதோறும், ஆடிப்பூரத் திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு, 25ம் தேதி, கொடியேற்றத்துடன், விழா துவங்கியது. நேற்று, தேரோட்டம் நடைபெற்றது. காலை, சிவாய நமஹ என்ற பக்தர்களின் பக்தி கோஷத்துடன், அலங்கரிக்கப்பட்ட தேரில், கோகர்ணேஸ்வரர், பிரகதாம்பாள் எழுந்தருளினர்.சிவனடியார்கள், திருமுறை பாடல்களை பாட, தேரின் வடக்கயிற்றை, பக்தர்கள் இழுத்தனர். சிறிது நேரத்தில், வடக்கயிறு, திடீரென அறுந்தது. இதையடுத்து, பக்தர்கள், சேலை மற்றும் கயிறு ஆகியவற்றால், வடகயிற்றை இணைத்தனர். அதன் பின், தேரோட்டம் தொடர்ந்தது. நான்கு வீதி வழியாக வலம் வந்து, கோவிலுக்கு அருகே, தேர் நிலைக்கு வந்தது.