கீழக்கரை: ஏர்வாடியில் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. பிரசித்தி பெற்ற இத்தர்காவிற்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான யாத்ரீ கர்கள் வந்து செல்கின்றனர். 845ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் புகழ்மாலை ஜூலை 4 மாலை 6:30 மணிக்கு துவங்கியது.
ஜூலை 13 (சனி) அடிமரம் ஊன்றப்பட்டும், ஜூலை 14 மறுநாள் (ஞாயிறு) மாலை கொடி ஊர்வலமும், கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.
மதநல்லிணக்க சந்தனக்கூடு கடந்த ஜூலை 26 (வெள்ளி) மாலை மவுலீதுடன் துவங்கி மறு நாள் அதிகாலை 3:00 மணி வரை நடந்தது. ஜூலை 27 அதிகாலை அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூடு தேர் கொண்டு வரப்பட்டது. பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை போர்த்தப்பட்டது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர். நேற்று (ஆக., 2ல்) மாலை 5:00 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டது.
பாதுஷா நாயகத்தின் புனித மக்பராவில் கொடி வைக்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை தர்கா ஹக்தார் பொதுமகா சபையினர் செய்திருந்தனர். கொடியிறக்கத்திற்கு பின் இரவு 7:00 மணிக்கு நெய்சோறு வழங்கப்பட்டது. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.