பதிவு செய்த நாள்
09
ஆக
2019
12:08
காஞ்சிபுரம்: வி.ஐ.பி., தரிசன வழியில், நேற்று 8ம் தேதி, நடந்த குளறுபடியால், பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவத்தின் கடைசி நாளான, 17ம் தேதி, அனைத்து வகைதரிசனமும் ரத்து செய்யப்படுவதாக, கலெக்டர், பொன்னையா அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், வரதராஜர் கோவிலில், அத்தி வரதர் வைபவம், 39 நாட்களாக, வெகு விமரிசையாக நடைபெறுகிறது.கடும் கூட்டத்தில், வரிசையில் நின்று, பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். நேற்று (ஆக., 8ல்) ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 35 - 70 வயதுடைய ஒன்பது பேர் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குடிநீர்: பக்தர்கள் வசதிக்காக, பல இடங்களில் கழிப்பறை, குடிநீர் வசதிகள் இருந்தாலும், வி.ஐ.பி., வரிசையில் கழிப்பறை இல்லை.அதேபோல், கிழக்கு கோபுரம் - செங்கல்பட்டு சாலையில், திறந்தவெளியில் நிற்கும் பக்தர்களுக்கு, குடிநீர் வசதி இல்லை.இந்நிலையில், கலெக்டர், பொன்னையா, நேற்று, (ஆக., 8ல்)நிருபர்களிடம் கூறியதாவது:காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு, 13, 14 மற்றும், 16ம் தேதிகளில், விடுமுறை அளிக்கப்படுகிறது.அத்தி வரதர் வைபவம் தொடர்பாக, வரதராஜ பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள், அறநிலையத் துறையினரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அத்தி வரதரை, அனந்தசரஸ் குளத்திற்கு மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டிய சில பூஜைகள், 17ம் தேதி நடைபெற உள்ளன. எனவே, அன்றைய தினம், அனைத்து தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது. இந்நிகழ்வை பார்க்க, பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.வரும், 16ம் தேதி இரவு, எவ்வளவு கூட்டம் வந்தாலும், 17ம் தேதி அதிகாலை வரை அனுமதிக்கப்படும். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருவோருக்கு, வந்த வாசி சாலை, கீழம்பி, முத்தியால்பேட்டை ஆகிய இடங்களில், பெரிய பந்தல் அமைக்கப்படுகிறது.
அங்கு காத்திருந்து, மினி பஸ் மூலம், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரலாம். பக்தர் களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், மூன்று பந்தலில் செய்யப்படும்.தற்போது, 45 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன; கூடுதலாக, 25 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.அத்தி வரதர் விழா ஆரம்பித்ததில் இருந்து, நேற்று (ஆக., 08) வரை, 70.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
மரணம்: பக்தர்கள் பாதுகாப்பு பணிக்காக, கோவையிலிருந்து வந்து, வாலாஜாபாத்தில் உள்ள கல்லுாரி ஒன்றில், வெள்ளியங்கிரி, 50, என்ற உதவி ஆய்வாளர் தங்கியிருந்தார்.இவருக்கு, ஓய்வு இல்லாத காரணத்தால், உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஆக., 08) காலை, 6:00 மணிக்கு, அவர் மயங்கி விழுந்து இறந்தார்.
’டோனர் பாஸ்’ வழியில் குளறுபடி: வரதராஜர் கோவிலில், கடும் நெரிசல் காரணமாக, மேற்கு கோபுரத்தில், மேம்பாலம் போல் அமைத்து, வி.ஐ.பி.,க்களுக்கு தனி வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது. பொது தரிசன பக்தர்கள், தரிசனம் முடித்து வெளியேவர கீழாகவும், வி.ஐ.பி., - வி.வி.ஐ.பி., வரிசையில், தரிசனம் செய்ய மேலாகவும் செல்வதற்கு ஏற்ப, தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கான பணிகள், நேற்று முன்தினம்(ஆக., 07) நள்ளிரவே முடிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று (ஆக., 08) மதியம் வரை, பணிகள் தொடர்ந்ததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வி.ஐ.பி., வரிசையில் நிற்க துவங்கினர். 9 மணி நேரத்திற்கும் மேலாக, தரிசனம் செய்வதில் சிக்கல் நீடித்தது. ஆனைக்கட்டி தெருவில், காலை யில் நின்ற பக்தர்கள், மாலை வரை அங்கேயே நின்று, வெறுத்து போய் வீட்டிற்கு திரும்பினர். ’டோனர் பாசில்’ குறிப்பிடப்படும் தேதி அன்றே, தரிசனம் செய்ய முடியும். ஆனால், நேற்று (ஆக., 08) வரிசையில் நின்று, பலர் வீடு திரும்பினர். அவர்கள், 8ம் தேதி குறிப்பிட்ட பாசை எடுத்து வந்து, அத்தி வரதரை, எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம். வி.ஐ.பி., தரிசனத் தில், நேற்று (ஆக., 08) நடைபெற்ற குளறுபடியால், பக்தர்கள் கடும் கோபமடைந்தனர்.