பதிவு செய்த நாள்
09
ஆக
2019
12:08
சென்னிமலை: சென்னிமலை முருகனுக்கு, 1,200 குடத்தில், பாலாபிஷேகம் நடந்தது. சென்னிமலை, மலை மீதுள்ள, பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு, ஆடி மாத, விசாக நட்சத்திரத்தில், சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் பாலாபிஷேக பெருவிழா நடக்கிறது.
நடப்பாண்டு, 52வது ஆண்டு விழா, கோலாகலமாக நேற்று நடந்தது. இதையொட்டி காலை, 7:40 மணிக்கு, 1,200 பால் குடங்களை சுமந்த ஆண், பெண் பக்தர்கள், கைலாசநாதர் கோவிலில் இருந்து, மேள, தாளம், காவடி ஆட்டத்துடன், சென்னிமலை நகரில் நான்கு ரத வீதிகளிலும் சென்றனர். பின், படிகள் வழியாக மலைக்கோவிலை அடைந்தனர். தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவம் தலைமையில், முருக பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, உற்சவ மூர்த்தி பிரகார உலா நடந்தது. விழாவால், அதிகாலை முதலே, சென்னிமலை முருகன்கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது.