பதிவு செய்த நாள்
28
மார்
2012
04:03
காமதேனு பாற்கடலில் இருந்து தோன்றியது. எனவே, காமதேனுவின் சன்னதிகளே பூலோகத்தில் பசுக்களாக இருக்கின்றன எனப் புராணங்கள் கூறுகின்றன. தென் நாட்டில் விநாயகப் பெருமான் கையில் மோதகம் இருக்கும். ஆனால் வடநாட்டில் பெருமான் கையில் முள்ளங்கி இருக்கும். தெய்வங்களைக் காய்கறிகளால் அலங்காரம் செய்து வழிபடுவதுண்டு. தோட்டங்களில் காய்கறி விளைச்சல் பெருகிய மகிழ்ச்சியைக் காட்டி நன்றி செலுத்தும் வண்ணம் இவ்வாறு செய்வர். இத்தகைய அலங்காரம் சாகம்பரி எனப்படும். சாதாரணமாக தல விருட்சமாக ஒரு கோயிலுக்கு ஒரு மரம்தான் இருக்கும். ஆனால் சிதம்பரம் கோயிலில் தில்லை மரம், ஆல மரம் என்று இரண்டு தல விருட்சங்கள் உள்ளன.
கோயிலில் தீர்த்தவாரி என்று குறிப்பிடுவதைக் கேள்விப்பட்டிருப்போம். உயிர்கள் இறைவனின் அருட்கடலில் மூழ்கிப் புனிதமடைந்து வீடுபேறு அடைவதே தீர்த்த வாரியின் உட்பொருள். கல்லில் ஒளி, ஈரம், காற்று, பூமி, வானம் ஆகிய ஐந்தும் இருக்கின்றன. அதனால்தான் பஞ்ச பூதங்கள் அடங்கிய கல்லில் தெய்வ விக்ரகங்கள் படைக்கப்படுகின்றன. உணவு உடம்பு, மூச்சு உடம்பு, மன உடம்பு, அறிவு உடம்பு, இன்ப உடம்பு ஆகிய ஐந்தின் தத்துவம் கோயில்களில் இருக்கும் ஐந்து பிராகாரங்களாகும். திருமணம் ஆகாத பெண்கள் வீட்டில் துளசிக் கல்யாணம் செய்தாலும், துளசியால் விஷ்ணுவை பூஜித்தாலும், துளசி பத்திரத்தைக் கோயிலுக்கு அர்ப்பணித்தாலும் விரைவில் விவாகம் ஆகி சுபிட்சம் அடைவார்கள்.
வேலூர் மாவட்டம் குண்டுரெட்டியூர் கிராமம் ஏலகிரி மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு ஒரு பெரிய பாறையிலுள்ள சுரங்கப்பாதையில் ஒரு பக்கம் சென்று மறுபக்கம் வர சுமார் 10 நிமிடங்கள் ஆகின்றன. இக்குகையில், காளியம்மன் படம் வரையப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்தக் காளியை சுமார் ஐந்நூறு ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். ராசிபுரம் நகரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது வெண்ணந்தூர் முத்துக்குமாரசுவாமி ஆலயம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப் பெருமானுக்கு வடைமாலை சாத்தி வழிபட்டால் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும் என்று சொல்கிறார்கள்.