பதிவு செய்த நாள்
20
ஆக
2019
03:08
அன்னை காளியையும், கண்ணனையும் பாடும் கவிஞர்கள் காலம் கடந்து வாழ்கின்றனர் என்பதற்கு மகாகவி பாரதியே சாட்சி. தாய், தந்தை, தோழன், அரசன், சேவகன், சத்குரு, சீடன் என பலவித வடிவங்களில் கண்ணனைப் பாடிப் பரவசம் அடைந்தார் அவர். கண்ணனைத் தோழனாக கருதி அவர் பாடிய பாடலை இங்கு பார்ப்போம்.
நண்பன் என்றால் வழிகாட்ட வேண்டும் அல்லவா... ”கண்ணா! பிழைக்கும் வழியைச் சொல்லப்பா” என்று கேட்டால் நிச்சயம் அருள்வான். நம்பிக்கையுடன் அவன் சன்னதியில் வழிபட்டால் நல்வழி கிடைக்கும். அரசனான அர்ஜுனனுக்கு மட்டும் கண்ணன் வழிகாட்டி இல்லை. ஏழைக் குசேலனுக்கும் வாழ்வு தந்து தன் எளிமையை உலகறியச் செய்தான். பகவத் கீதையினை உலகிற்கு உபதேசம் செய்ததோடு தானும் அதை பின்பற்றினான். பக்தன் அர்ஜுனனுக்காகத் தேரோட்டியாக இருந்தான். தினமும் மாலையில் தேரைச் சுத்தம் செய்து சக்கரங்களுக்கு மசகு இட்டான். குதிரைகளைக் குளிப்பாட்டி, உணவு கொடுத்தான். உழைக்கச் சொன்ன அவன், தானும் உழைப்பிற்கு உதாரணமாக இருந்தான். இருந்த இடத்தில் இருந்தபடி இயக்கும் ஆற்றல் கண்ணனுக்கு இருந்தும், களத்தில் இறங்கிப் பணி செய்வதே கடமை என வாழ்ந்தான் என்பதால், ’எனக்கும் வழி காட்டியவன் கண்ணன்’ என்கிறார் மகாகவி பாரதி. பெரிய மனிதர்களை சந்திக்கும் போது, நாம் தான் நேரில் செல்ல வேண்டும். தற்காலத்தில் மக்கள் பணியில் ஈடுபடும் ஒரு வார்டு கவுன்சிலரைக் கூட நம்மால் சந்திக்க முடியுமா அல்லது போனில் அழைக்க முடியுமா? பாருங்கள்.
ஆனால் துவாரகை மன்னரான கண்ணன் ஓடோடி வந்து உதவிய சம்பவங்கள் பாகவதம், மகாபாரதத்தில் உள்ளன. பக்தர்கள் அழைக்கும் பொழுது ஓடோடி வந்தான். தன்னை நம்பியவர்களை காக்க சாக்கு, போக்கு சொல்லாமல் அரை நொடிக்குள் வருவான் கண்ணன். மழைக்குக் குடையாகவும், பசி நேரத்தில் உணவாகவும் இருப்பான். கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும், பதவிகள் ஆயிரம் இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் பசிக்கின்ற நேரத்தில் உணவே நமக்கு உயிராகும். அந்த உயிரைப் போன்றவன் கண்ணன். அவனது நட்பால் வாழ்வு சுகமாகும். அவனது நட்பை பெற நாம் பக்தி செலுத்துவோம்.
பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென்றால் ஒருபேச்சினிலே சொல்லுவான்
உழைக்கும் வழி, வினையாளும் வழி பயன் உண்ணும் வழி யுரைப்பான்
அழைக்கும் பொழுதினில் போக்குச் சொல்லாமல்அரை நொடிக்குள் வருவான்
மழைக்குக் குடை, பசி நேரத்து உணவு என்றன்வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்.