இஸ்ரேல் நாட்டில் வாழ்ந்த தீர்க்கதரிசி மோசஸ், தன் நாட்டு மக்களை அழைத்துக் கொண்டு வேறு இடத்துக்கு போய்க் கொண்டிருந்தார். அவர்களைக் கொல்ல எதிரிகள் பின்தொடர்ந்தனர். ஓரிடத்தில் செங்கடல் குறுக்கிட்டது. அதை எப்படி தாண்டிச் செல்வது என மோசஸ் குழம்பினார். எதிரிகளிடம் சிக்கி அழிவது உறுதி என மக்கள் புலம்பினர். மோசஸ் ஆண்டவரை நோக்கி,“பிதாவே! நீர் தான் கடலைக் கடக்க வழி காட்ட வேண்டும்” என்றார். அப்போது வானில் ஆண்டவரின் குரல் ஒலித்தது. ”நீ கெஞ்சுவது ஏன்? உன் மக்களை தைரியத்துடனும், என் மீதுள்ள விசுவாசத்துடனும் கடலைக் கடந்து போக உத்தரவிடு. அவ்வாறு செய்தால் பாதை தானாகவே திறக்கும்” என்றார். மோசஸ் மக்களை நோக்கி, ” சவாலை எதிர்கொள்ளுங்கள். தைரியமாக கடலுக்குள் இறங்குங்கள். ஆண்டவர் நம்மைப் பாதுகாப்பார்” என்றார். அவர்களும் இறங்கினர். கடல் நடுவில் பிளந்து வழிவிட, மக்கள் கடந்தனர். ஆண்டவரை மனதில் நினைத்துக் கொண்டு சவால்களை எதிர்கொண்டால் வெற்றி கிடைக்கும்.