பிரான்சிஸ் அசிசி என்ற துறவியைத் தேடி மூன்று இளைஞர்கள் வந்தனர். “துறவியாரே! நாங்கள் மலைக் குகைகளில் தனித்தனியாக வசிக்கிறோம். ஆண்டவரைக் காண்பதற்காக ஜெபிக்கிறோம். ஆனாலும் அவரைக் காண முடியவில்லை. தாங்கள் தான் ஆலோசனை சொல்ல வேண்டும்” என்றனர். சிரித்த துறவி, “நீங்கள் உங்களுக்குள் பிரிந்திருந்தால் ஆண்டவரை எப்படி காண முடியும்? மூவரும் ஒரே இடத்தில் தங்குங்கள். உங்களில் ஒருவரைத் தந்தையாகவும், ஒருவரைத் தாயாகவும், ஒருவரைக் குழந்தையாகவும் பாவியுங்கள். ஒரு மாதம் கழித்து தந்தையாக இருந்தவர் தாயாகவும், தாயாக இருந்தவர் தந்தையாகவும் மாற வேண்டும். பின்னர் குழந்தையாக இருந்தவர் தாய், தந்தையாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இப்படி எல்லோருமே, மூன்று உறவுகளாக மாறி மாறி நடந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் ஒற்றுமை, அன்பு எப்போது அதிகமாகிறதோ அப்போது ஆண்டவர் உங்களுக்குத் தெரிவார்” என்றார்.