பதிவு செய்த நாள்
02
ஏப்
2012
11:04
திருவெண்ணெய்நல்லூர் : கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் வரும், 17ம் தேதி சித்திரைப் பெருவிழா துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டின், சித்திரை விழா, 17ம் தேதி துவங்குகிறது. மறுநாள், 18ம் தேதி பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலி கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மே 1ம் தேதி இரவு, தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், மும்பை, சென்னை, டில்லி, கோல்கட்டா, கர்நாடகா, கேரளா மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் திருநங்கைகள், பூசாரிகளின் கையால் தாலி கட்டிக்கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். விழாவை முன்னிட்டு, சென்னை, கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.