பதிவு செய்த நாள்
03
செப்
2019
10:09
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோவிலில், 150 கிலோ எடையிலான பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல் செய்து, வழிபாடு நடத்தப்பட்டது.
திருச்சி, மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், இடைப்பட்ட பகுதியில் தாயுமான சுவாமியும், மலை மீது உச்சிப்பிள்ளையாரும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை கோவிலில், 50 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ வெல்லம், 30 கிலோ நெய், 6 கிலோ தேங்காய் துருவல், ஜாதிக்காய், ஏலக்காய் மற்றும் எள்ளுப்பொடி, 4 கிலோ ஆகியவற்றை சேர்த்து, 150 கிலோவில் கொழுக்கட்டைக்கான கலவை தயாரிக்கப்பட்டது.
நேற்று அதிகாலையில், அந்த கலவையில் இருந்து, தலா, 75 கிலோ எடுத்து, கோவில் மடப்பள்ளியில், ஆவியில் வைத்து, இரண்டு பெரிய கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. அதில் ஒரு கொழுக்கட்டை, மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு படைக்கப்பட்டது. பின் நேற்று காலை, 10 மணிக்கு, ஓதுவார்கள் பாடல் மற்றும் மங்கள இசையுடன் பக்தர்கள், மற்றொரு கொழுக்கட்டையை துாளியில் கட்டி, மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு நெய்வேத்தியம் செய்வதற்காக, எடுத்துச் சென்றனர்.
காலை, 10.30 மணிக்கு, உச்சிப்பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல் செய்து, சதுர்த்தி வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, அந்த கொழுக்கட்டை, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நேற்று காலை முதல் இரவு வரை, பல ஆயிரம் பக்தர்கள், மலை மீது ஏறி உச்சிப்பிள்ளையாரை தரிசித்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை தொடர்ந்து, 12 நாட்களுக்கு விநாயகப் பெருமான் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலிக்கிறார். 13ம் நாளில், (15ம் தேதி) உற்சவ மாணிக்க விநாயகருக்கு, 27 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும். அன்று இரவு, மூஷிக வாகனத்தில் மாணிக்க விநாயகர் திருவீதி உலா நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.