பண்டிதர் ஒருவர் சூரிய கிரகணத்தன்று தனுஷ்கோடிக்கு வந்தார். கையில் தீர்த்தப் பாத்திரம் இருந்தது. திடீரென வயிறு புரட்டவே, மலம் கழிக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டது. தீர்த்தத்தை கையில் வைத்துக் கொண்டு மலம் கழிக்கக் கூடாது அல்லவா?
எனவே கடற்கரையில் குழி தோண்டி அந்த பாத்திரத்தைப் புதைத்தார். அந்த இடம் அடையாளம் தெரிய, மணலில் ஒரு லிங்கம் போல குவித்தார். மறைவிடத்தில் ஒதுங்கினார். இதை பார்த்தார் பக்தர் ஒருவர். மணலுக்குள் பாத்திரத்தை புதைத்தது அவருக்கு தெரியாது. ஆனால் சிவலிங்கம் இருப்பதைக் கண்டார். கிரகண காலத்தில் சிவலிங்கம் பிடித்து விட்டு, நீராடச் செல்லுகிறார் என்றால், அது புண்ணியச் செயலாகத் தான் இருக்க வேண்டும் என எண்ணினார். மணலில் லிங்கம் வடித்தார். இதை பார்த்த பலரும், ஆளுக்கு ஒரு லிங்கம் வடித்தனர்.
பண்டிதர் திரும்பி வந்தார். கடற்கரை எங்கும் சிவலிங்க மயம். எந்த இடத்தில் பாத்திரத்தை புதைத்தோம் என்றே புரியவில்லை. “ ஜனங்களே! அடையாளம் தெரிய, லிங்கம் வடித்தால் அதையே ஒரு சடங்காகக் கருதி பாத்திரம் எங்கிருக்கிறது என்பதை தெரியாமல் செய்து விட்டீர்களே!” என தேடியபடி நின்றார். ஆன்மிகச் சடங்குகளை காரணம் அறிந்து செய்ய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.