திருப்பதி: ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான விநாயகர் சிலைக்கு படைக்கப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டுவை ராம் ரெட்டி என்பவர் 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டு ஏலம் எடுத்தார்.
தென்னிந்தியாவை பொறுத்தவரை ஐதராபாதில் விநாயகர் சதுர்த்தி மிகவும் புகழ் வாய்ந்த திருவிழாவாகும். விநாயகர் சதுர்த்தி நாள் முதல் அடுத்த 11 நாட்களுக்கு நகரின் ஒவ்வொரு மூலையிலும் பிரமாண்டமான விநாயகர் சிலைகளை தரிசனம் செய்யலாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் மிகவும் உயரமான விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து பூஜிப்பதே ஆகும்.
கடந்த 1954ம் ஆண்டில் சுதந்திரப்போராட்ட தியாகி சங்கரையா கைரதாபாத்தில் ஒரு அடி உயரம் உள்ள விநாயகர் சிலையை நிறுவி அந்தப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை துவக்கி வைத்தார். அப்போது முதல் கைரதாபாத் விநாயகர் சதுர்த்தி உற்ஸவ குழுவினர் முந்தைய ஆண்டு நிறுவப்பட்டதை விட உயரமான சிலையை நிறுவி பூஜித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 60 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது. இந்த ஆண்டு அதை விட உயரமான சிலையை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தில் 61 அடி உயரத்துடன் 12 தலைகள் 24 கைகளுடன் கூடிய மிக பிரமாண்டமான விநாயகர் சிலை கைரதாபாத்தில் நிறுவப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி உற்ஸவம் முடிவுக்கு வந்ததால் கைதராபாத் கணபதியை நேற்று செகந்திராபாத்தில் உள்ள உசேன் சாகர் ஏரியில் கரைப்பதற்காக விநாயகர் சதுர்த்தி உற்ஸவ குழுவினர் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
இந்நிலையில் மற்றொரு நிகழ்வாக ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டுவை ராம் ரெட்டி என்பவர் 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டு ஏலம் எடுத்தார். கடந்தாண்டு பாலப்பூர் கணபதி லட்டு 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.