பதிவு செய்த நாள்
19
செப்
2019
12:09
சென்னிமலை: சென்னிமலை அருகே, மழை வேண்டி கோவில்களில் சுவாமிக்கு அரிசி, சர்க்கரை வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
சென்னிமலை அருகே உள்ளது புதுவலசு, தட்டாரவலசு. இப்பகுதி மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் புதுவலசு, தட்டாரவலசு மற்றும் நல்லபாளி மக்கள் ஒன்று கூடி விரதம் இருந்து, மழைக்காக அரிசி பூஜை நடத்துவது வழக்கம்.
அதன்படி நேற்று 18ல் , பொதுமக்கள் விரதம் இருந்து காலை, 8:00 மணிக்கு புதுவலசு பிள்ளை யார் கோவிலில் அரிசி வைத்து பூஜை செய்தனர். பிறகு அங்கிருந்து தாரை, தப்பட்டை முழங்க அரிசி மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டு தட்டாரவலசு, வண்ணாம்பாறை ஆகிய இடங்களில் உள்ள பிள்ளையார் கோவில், நல்லபாளி சிவ்வந்தீஸ்வரர் கோவில், ஆண்டாத்தாள் கோவில் மற்றும் நடுமலை ஆண்டவர் கோவில் களில் அரிசி, நாட்டு சர்க்கரையை வைத்து வழிபாடு செய்தனர். மதியம், 12:00 மணியளவில் சென்னிமலையின் அடர்ந்த தெற்கு வன பகுதியில் உள்ள வருணபகவான் கோவிலுக்கு கரடு, முரடான பாதையில் நடந்து சென்று அங்கும் வழிபாடு செய்தனர்.
இறுதியாக மலங்காட்டு கருப்பணசாமி கோவிலில், கருப்பணசாமி, கன்னிமார் மற்றும் தன்னாசியப்பனுக்கு பூஜை செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.