மகான் துகாராம் பொறுமை நிறைந்தவர். அவர் மனைவியோ கோபக்காரி, ஒருநாள், வயலுக்குச் சென்ற துகாராம், கரும்புக் கட்டுடன் வீட்டுக்குத் திரும்பினார். வழியில் கேட்டவர்களுக்கெல்லாம் தன்னிடம் இருந்த கரும்புகளைக் கொடுத்துக்கொண்டே வந்தார். இறுதியில் ஒரே ஒரு கரும்பு மட்டுமே மிஞ்சியது. அதை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார் துகாராம். நடந்ததை அறிந்த அவர் மனைவி, கடுங்கோபம் கொண்டாள். துகாராமின் கையில் இருந்த கரும்பைப் பிடுங்கி, அவர் முதுகில் ஓங்கி அடித்தாள். அடித்த அடியில் கரும்பு முறிந்து, இரண்டு துண்டானது. அடி வாங்கிய நிலையிலும் கோபப்படாத துகாராம், மனைவியிடம் கூறினார். ""அன்பே... ஒரு கரும்பை இருவர் சாப்பிடுவது எப்படி என குழம்பினேன். இப்போது நீ அதை இரண்டாக்கிவிட்டாய், வா, ஆளுக்கு ஒன்றாகக் கடித்துச் சாப்பிடலாம்!