பதிவு செய்த நாள்
25
செப்
2019
02:09
திருப்பூர்:திருப்பூர் வீரராகப்பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை நாட்களில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெருமாளை வழிபடுகின்றனர். வைணவ திருத்தலங்களில், புரட்டாசி சனிக்கிழமை நாட்களில், அதிகாலை வேளையில், உற்சவமூர்த்திக்கு திருமஞ்சனம் செய்து, சிறப்பு அலங்கார புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில், சுவாமிக்கு திருமஞ்சனம் இல்லாமல், வெள்ளிக்கிழமை இரவே அலங்காரம் செய்யப்படுவதாக, பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் கூறுகையில், பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்த பின், அலங்காரம் செய்து மற்றும் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கும். திருப்பூர் கோவிலில், அப்படி திருமஞ்சனம் செய்யும் வழக்கமில்லை என, பட்டாச்சார்யார்கள் தெரிவித்துள்ளனர், என்று சமாளித்தார்.கோவில் பட்டாச்சார்யார் ஸ்ரீனிவாசனிடம் இதுபற்றி விசாரித்ததில், பெருமாள் சயனக்கோலத்தில் உள்ள கோவில்களில், திருமஞ்சனம் அதிகம் நடக்காது. வைகுண்ட ஏகாதசி மற்றும் தேர்த்திருவிழா என, ஆண்டுக்கு இருமுறை மட்டும் திருமஞ்சனம் செய்கிறோம். ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பது போல், மற்ற நாட்களில் சிறப்பு அலங்காரம் மட்டும் நடத்துவது வழக்கமாக இருக்கிறது, என்றார்.
திருமகள் வாழும் திருப்பூர் நகரம் என்று பெருமையாக கூறப்படும் இடத்தில் உள்ள, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை திருமஞ்சனம் நடக்க வேண்டும். மூலவர் சயனக்கோலத்தில் இருந்தாலும், உற்சவமூர்த்தி நின்ற கோலத்தில்தான் இருக்கிறார்.எனவே, ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், திருமஞ்சனத்துடன் அலங்காரமும், சுவாமி புறப்பாடும் நடத்த, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.