பதிவு செய்த நாள்
27
செப்
2019
12:09
சென்னை: சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், பிரமாண்டமான முறையில், சக்தி கொலு அமைக்கப்படுகிறது. 29 முதல், அக்., 8 வரை, கொலு கொண்டாடப்படுகிறது.மக்கள் கொடுத்தவற்றுடன், தயாரிப்பாளர்களிடம் இருந்தும், ஏராளமான பொம்மைகள் தருவிக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
மகிஷாசுரமர்த்தினி முதல், லேட்டஸ்ட் அத்தி வரதர் வரையிலான பொம்மைகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.கேரள கலைஞர்களின் கைவண்ணத்தில், கோவில் முழுதும் வண்ணக்கோலங்கள் வரையப்பட்டு வருகின்றன.பக்தர்கள் பாடுவதற்கான மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது.பேச்சாளர்களின் சிறப்பு சொற்பொழிவுகளும், நாள்தோறும் நடக்கின்றன.சிறப்பு நிகழ்வாக, ஏகதின லட்சார்ச்சனையும், வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடக்கிறது.திருக்கயிலாய வாத்திய முழக்கம்= நவராத்திரி துவக்க நாளன்று, மாலை, 4:00 மணிக்கு, எஸ்.கணேசன் என்ற, ஆன்மிக அன்பர் தலைமையில், திருக்கயிலாய வாத்தியம் முழங்கப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டு தொன்மையான இந்த கயிலாய வாத்தியம், சமீப காலமாக, சிவன் கோவில்களில் இசைக்கப்படுகிறது.
கொக்கறை, எக்காளம், தவண்டை, கொடு கொட்டி, நகரா என்றழைக்கப்படும், இந்த பழமையான இசைக்கருவி ஒவ்வொன்றும், சிவாலயங்களில், ஒருகாலத்தில் சிவ நாதமாக ஒலித்துக் கொண்டிருந்தவை. யாழ், உயிர்த்துாம்பு, குறும்பரந்துாம்பு போன்று, காலத்தால் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, நம் தமிழ் மண்ணின் பாரம்பரிய இசைக்கருவிகள் தான் இவை.