பதிவு செய்த நாள்
01
அக்
2019
04:10
கல்வி, செல்வம், வீரம் என அனைத்தையும் தருபவள் பராசக்தி. இதை வழங்குபவர்கள் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை. இதில் செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி. செல்வம் என்றவுடன் பணத்தை மட்டுமே நாம் நினைக்கிறோம். அவளின் ஓவியத்தில் பணம் கொட்டுவது போல வரைகின்றனர். ஆனால் பணம் மட்டுமே செல்வம் இல்லை. வாழத் தேவையான அனைத்தும் செல்வம் தான்.
திருமணங்களில் மணமக்களை வாழ்த்தும் போது “பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்துவர். நோய் இல்லாத உடல், கல்வி, தீமை இல்லாத செல்வம், நிறைந்த தானியம், ஒப்பற்ற அழகு, அழியாத புகழ், பெருமை, இளமை, நுட்பமான அறிவு, குழந்தைச் செல்வம், உடல் வலிமை, மனத்துணிவு, நீண்ட ஆயுள், செயலில் வெற்றி, நல்ல வினை, இன்ப அனுபவம் ஆகிய பதினாறும் வாழத் தேவையான செல்வங்கள் என நம் முன்னோர்கள் வகுத்தனர்.
பணம் சம்பாதிப்பதில் நேர்மையும், தர்ம சிந்தனையும் இருப்பது அவசியம். ’செய்க பொருளை’ என்கிறார் திருவள்ளுவர். ’பொன்னும், மெய்ப் பொருளும் தருவானை’ என்கிறார் சுந்தரர். ’தீவினை விட்டு ஈட்டல் பொருள்”’ என்கிறார் அவ்வையார். ’நற்பொருள் குவிதல் வேண்டின்’ என்கிறார் கண்ணதாசன். இப்படி நேர்மையான வழியில் தான் பொருள் ஈட்ட வேண்டும். நேர்மை இல்லாமல் தேடிய பணம் ஏற்கனவே இருப்பதையும் சேர்த்துக் கொண்டு நம்மை விட்டுப் போகும் என்கிறார் திருவள்ளுவர்.
2000ம் ஆண்டுக்கு முன்பு வரை, நேர்மையற்ற வழியில் பணம் தேடுவது தவறு என மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். கிராமங்களில் கூட, ’அவன் காசு என்ன நல்ல காசா?’ எனக் கேட்பார்கள். ஆனால் இன்றோ நேர்மையற்ற வழியில் கோடிக் கணக்கில் பணம் குவிப்பவர்களிடம் இது பற்றி சொன்னால், ’உனக்கு புத்திசாலித்தனம் இல்லை; இருந்தால் நீயும் சம்பாதித்துக் கொள்’ என பேசுகிறார்கள்.
லஞ்சம் வாங்குபவர்கள் எல்லாம் பணக்காரர் ஆகியிருக்கிறார்களா?. பணியில் இருந்து ஓய்வு பெற்ற லஞ்சவாதிகள், நோய்க்கு ஆளாவதையும், துன்பம் தாங்க முடியாமல் தவிப்பதையும், அமைதியின்றி அலைவதையும் காண முடியும். நேர்மை உள்ளவர்கள் எளிமையாக வாழ்ந்தாலும், நிம்மதியாக வாழ்வதைக் காணலாம்.
பணம் தேடுவது மட்டும் வாழ்க்கை இல்லை. அதனை அனுபவிக்கவும் பேறு வேண்டும். அம்பிகை தந்த பொருட்செல்வத்தை நாம் மட்டும் அனுபவிக்காமல் (ஊருணி நீர் எப்படி ஊருக்கு பயன்படுகிறதோ அது போல) அனைவருக்கும் பயன்படும் விதத்தில் வாழ வேண்டும். அதற்கு துாய்மை, ஈரம், இரக்கம் மனதில் இருக்க வேண்டும்.
மகாகவி பாரதியார் காட்டிய வழியில் நாமும் மகாலட்சுமியைப் பிரார்த்திப்போம். செல்வத் திருமகளை திடமாக, உறுதியாகச் சிந்தனை செய்வோம். அவள் பதினாறு செல்வங்களையும் நமக்குத் தருவாள். அதை சமுதாயத்திற்குப் பயன்படும் விதத்தில் வழங்குவோம். அதனால் நம் புகழ் என்னும் ஒளியானது எல்லாத் திசைகளிலும் பரவட்டும். நேர்மையான வழியிலேயே பொருள் ஈட்டுவதே தர்மம் என வருங்காலத் தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லுவோம்.
செல்வத் திருமகளைத் - திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்
செல்வமெல்லாம் தருவாள் - நமதொளி
திக்கனைத்தும் பரவும்.