பதிவு செய்த நாள்
09
அக்
2019
04:10
ஒரு காலத்தில், கற்பலகைகளில் மந்திரங்களை எழுதி கடவுளாக வழிபட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள செல்லப்பிராட்டி கிராமத்தில், கற்பலகை வடிவ விக்ரகத்துடன் செல்வலலிதாம்பிகை கோயில் உள்ளது. தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். யாகத்தின் பலனாக ராமபிரான் அவதரித்தார். இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் ரிஷ்யசிருங்க முனிவர். இவர் காஷ்யப முனிவரின் மகனான விபாண்டகருக்கு பிறந்தவர். இவரிடம் ஒரு கற்பலகை இருந்தது. அதை அம்பாளாகக் கருதி அவர் வழிபட்டார். இந்தப் பலகை எப்படியோ இங்கு வந்துள்ளது. அதற்கு ‘லலித செல்வாம்பிகை’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் கற்பலகையை பிரதிஷ்டை செய்து, கீழே அம்பாள் விக்ரகம் வைக்கப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் காஞ்சிக்கு செல்லும் போது, அவருக்கு இத்தல அம்மன் காட்சி கொடுத்து வழி கூறியதாக கூறப்படுகிறது. ரிஷ்யசிருங்கரின் விக்ரகமும் இங்குள்ளது. கற்பலகை, 4 அடி உயரமும், செவ்வக வடிவமும் கொண்டது. பலகையில் 12 சதுரக் கட்டங்கள் உள்ளன. இந்தக் கட்டங்களைச் சுற்றி, ஆதிபராசக்தியின் பீஜாட்சர மந்திரத்தின் சூட்சும எழுத்துக்கள் உள்ளன. நடுவில் திரிசூலம் உள்ளது. வலது மேல் பக்கத்தில் சூரியனும், இடது மேல் பக்கத்தில், சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. நடுநாயகமாக முப்பெரும் தேவியரின் அம்சங்களையும் ஒருங்கிணைத்து, அம்மனின் திருவுருவம் ஓவிய வடிவில் உள்ளது. ஆயினும், உருவ வழிபாடு கருதி, கற்பலகைக்கு கீழே 3 அடி உயரத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒரே விக்ரகத்தில் மூன்று தேவியரின் அம்சங்களும் இணைந்திருப்பதை இத்தலத்தில் தரிசிக்கலாம்.
திறக்கும் நேரம்: காலை 6 - 11 மணி, மாலை 4 - 8.30 மணி.
இருப்பிடம்: விழுப்புரத்திலிருந்து 38 கி.மீ. துõரத்திலுள்ள செஞ்சி சென்று, அங்கிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள செல்லப்பிராட்டி கூட்ரோட்டிற்கு ஆரணி பஸ்சில் செல்ல வேண்டும். கூட்ரோடு ஸ்டாப்பிலிருந்து அரை கி.மீ. துõரத்தில் கோயில்.