படைப்புக்கடவுளான பிரம்மனுக்கு நான்கு முகம் இருக்கிறது. இதே போல், நான்கு முகம் கொண்ட அம்பிகையும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? சிதம்பரம் தில்லைக்காளி கோயிலில் உள்ள பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கு நான்கு முகங்கள் உள்ளன. சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப்போட்டியில், சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்கிரதாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் துõக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே காளியால் செய்ய முடியுமா என கேட்க, பெண்மைக்குரிய நாணம் உந்தித்தள்ள காளியால் முடியாமல் போனது. இதையடுத்து அவளுக்கு வருத்தம் ஏற்பட்டது. அவளது வருத்தத்தைப் போக்கும் வகையில், பிரம்மா அவளை வேதநாயகி எனப்புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்படி காளி, ‘பிரம்ம சாமுண்டீஸ்வரி’ என்ற பெயரில் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். இவளுக்கு தனிசிலை உள்ளது. பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கு ‘தில்லையம்மன்’ என்ற பெயரும் உண்டு. இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். இவளுக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும். இருப்பிடம்: சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் ஒரு கி.மீ. தூரம்.