பதிவு செய்த நாள்
13
அக்
2019
04:10
தர்மபுரி: புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜை மற்றும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
தர்மபுரி, அன்னசாகரம் திம்மராய பெருமாள் கோவிலில், நான்காம் சனிக்கிழமை முன்னிட்டு நேற்று, சுவாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், யாகம் வளர்க்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், தர்மபுரி கோட்டை வரமஹாலட்சுமி பரவாசுதேவர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின், மூலவர் சுவாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வரமஹாலட்சுமி பரவாசுதேவர் திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி மாலை அணிவிக்கப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு, கருடசேவையில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில், செட்டிக்கரை சென்றாய பெருமாள் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, பெருமாள் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது.