சபரிமலை, ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. புதிய மேல்சாந்திகள் ஒரு மாத பிரார்த்தனைக்காக நேற்று சன்னிதானம் வந்தனர். நேற்று மாலை 5:30 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.
தொடர்ந்து கணபதி கோயிலில் தீபம் ஏற்றிய பின்னர் 18ம் படி வழியாக சென்று ஆழிகுண்டத்தில் தீ வளர்த்தார். தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் சபரிமலையில் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபரிமலை- சுதிர்நம்பூதிரி, மாளிகைப்புறம் - பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டுடன் 18ம் படிக்கு அருகில் வந்தனர். அவர்களை தற்போதைய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி மாலை அணிவித்து வரவேற்று அழைத்து வந்தார். கொடிமரத்தின் அருகில் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், உறுப்பினர் சங்கரதாஸ் வரவேற்றனர். தொடர்ந்து ஐயப்பனை வணங்கிய புதிய மேல்சாந்திகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இவர்கள் இனி ஒரு மாதம் சபரிமலையில் தங்கி பிரார்த்தனை செய்ய வேண்டும். கார்த்திகை ஒன்றாம் தேதி இவர்கள் பதவியேற்பர். கடந்த ஆண்டு வரை இந்த சடங்கு கார்த்திகை ஒன்றாம் தேதிக்கு முந்தைய நாள் நடைபெற்று வந்தது. சபரிமலை பூஜைகளை புதிய மேல்சாந்திகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு மாதம் சபரிமலையில் தங்க தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. இனி இவர்கள் 2020 ஐப்பசி மாதம் கடைசி நாளில் தான் வீடு திரும்ப முடியும்.ஐப்பசி மாத பூஜைக்காக அக்.22ம் தேதி இரவு 10:00 மணி வரை நடைதிறந்திருக்கும். இந்த நாட்களில் அதிகாலை 5:30 முதல் 11:30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். எல்லா நாட்களிலும் பகல் உச்சபூஜைக்கு முன்னோடியாக களபாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும்.