பதிவு செய்த நாள்
19
அக்
2019
11:10
திருப்புத்தூர்: விஷ பூச்சிகளிடமிருந்து தங்களை காக்கும்படி பெருமாள் கோயிலில் பக்தர்கள் விஷப் பூச்சி சிலைகளை விசேஷ நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். திருப்புத்தூர் அருகே கொங்கரத்தியில் வன்புகழ் நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது.
செட்டிநாடி பகுதியில் புரட்டாசி சனிக்கிழமையன்று ஒரே நாளில் ஐந்து பெருமாள் கோயில்களில் தரிசிக்கும் பழக்கம் உள்ளது. திருமயம், அரியக்குடி, திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் ஆகியவற்றுடன் கொங்கரத்தி பெருமாள் கோயிலும் ஒன்று. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் பெருமாளை வேண்டி பாம்பு, பூரான், தேள், வெட்டுக்கிளி போன்ற மண் பொம்மைகளை கோயிலில் செலுத்துகின்றனர். பாம்பு, தேள், விஷப்பூச்சிகள் கடித்தாலோ அல்லது கடிப்பது போல கனவு கண்டாலோ வன் புகழ் நாராயணனை தரிசித்தால் விஷக்கடி நீங்கும். விஷப்பூச்சிகள் நம்மை அண்டாது என்பது இக்கோயிலின் ஐதீகம். இதனால் பக்தர்கள் தாங்கள் விஷக்கடிப் பட்டாலோ, விஷப்பூச்சிகளைப் பார்த்தாலோ இங்கு நேர்த்திக்கடன் பாம்பு, தேள், பூரான், பல்லி போன்றவற்றின் மண் பொம்மைகளை கோயில் வளாகத்தினுள் செலுத்துகின்றனர். இதற்காக கோயில் பகுதியில் விஷப்பூச்சிகளின் மண் பொம்மைகள் விற்கப்படுகின்றன. இது மட்டுமின்றி இப்பகுதி விவசாயிகள் பெருமாளிடம் வேண்டிக் கொண்ட பிறகே வயல்களில் விதைக்கின்றனர். விளைச்சலுக்கு பிறகு அவற்றையும் கோயிலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.