பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளரும் செடிகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பெண்ணாடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா விமர்சையாக நடப்பது வழக்கம்.
இக்கோவில்கும்பாபிஷேகம், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. தற்போது கோவிலில் உள்ள கோபுரங்கள், சுவர்களில் அதிகளவில் விரிசல் ஏற்பட்டு, நாளுக்குநாள் வலுவிழந்து வருகிறது. கோபுரங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, சிலைகளும் சேதமடைந்து வருவதுடன், மழைநீர் கோபுரங்களில் ஏற்பட்ட விரிசல் வழியே உள்ளே செல்வதால் வலுவிழக்கும் அபாயம் உள்ளது. மேலும், மூலவர் கோபுர பகுதியில் உள்ள சுவர்களும் நாளுக்குநாள் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில், கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு பரிந்துரை செய்தது. கடந்தாண்டு ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலை பார்வையிட்டு சென்றனர். ஆனால் கும்பாபிஷேக பணி துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவில் கோபுரத்தில் மண்டிக்கிடக்கும் செடிகளை அகற்றி, பாலாலயம் பணியை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.