பதிவு செய்த நாள்
31
அக்
2019
02:10
சோழவந்தான்: “சுயநலம் தவறானது அல்ல. அதை பிறர் நலத்துடன் இணைத்து செய ல்படுத்த வேண்டும். குரு பக்தி முக்கியம். குரு பக்தி மூலம் தான் தேச பக்தி வளரும்,” என காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் கூறினார்.
மதுரை அருகே தேனூர் சுப்ரஜா வளாகத்திற்கு விஜயேந்திரர் நேற்று முன்தினம் (அக்., 29ல்) வந்தார். அவரது தலைமையில் நேற்று (அக்., 30ல்) காலை சந்திரமவுலீஸ்வர பூஜை, பிஷாவந்தனம், பாத பூஜை நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப் பட்டது.
சோழவந்தான் தென்கரை வேதபாடசாலையில் விஜயேந்திரர் பேசியதாவது: கிராமங்கள் தான் நாட்டு பொருளாதாரத்திற்கு முன்னுதாரணமாக உள்ளன. விவசாயம், கால்நடை பராமரிப்பு என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வருகின்றனர். ராம ராஜ்யம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக மக்களிடையே உள்ளது.
ராமராஜ்யம் என்பது படித்தவர், படிக்காதவர் என அனைவருக்குமானது. சிந்தித்தல், செயலை நேர்த்தியாக செய்தல் உள்ளிட்ட திறமைகளை கடவுள் வழங்கியுள்ளார். மக்களுக்கான பணிகளை செய்வது தான் ராமராஜ்யம். பாரம்பரியம் தான் பாரத தேசத்தின் அடையாளம், அதை நவீன யுகத்திலும் பின்பற்ற வேண்டும். சுயநலம் தவறானது அல்ல. அதை பிறர் நலத்துடன் பின்பற்ற வேண்டும். குரு பக்தி மூலம் தேச பக்தி வளரும் என்றார்.
ஏற்பாடுகளை காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் சமஸ்தானம் மதுரை கிளை தலைவர் ராமசுப்பிரமணியன், நிர்வாகிகள் சுந்தர், ஸ்ரீகுமார் செய்தனர். விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் சங்கர சீத்தாராமன், முன்னாள் அட்வகேட் ஜென்ரல் டி.ஆர்.ராஜகோபாலன், முன்னாள் பேராசிரியர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூர் தாமிரபரணி புஷ்கரம் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக விஜயேந்திரர் மதுரையில் இருந்து இன்று (அக்., 31) காலை புறப்படுகிறார்.