பதிவு செய்த நாள்
01
நவ
2019
03:11
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலுக்கு ’லட்சுமி’ யானை வந்த தினம் நேற்று (அக்., 31ல்) கொண்டாடப்பட்டது.புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழும் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக யானை இருக்க வேண்டும் என, முதல்வராக இருந்த ஜானகிராமன் விரும்பினார். அவரது முயற்சியால், கெம்பேப் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட குட்டி யானையை, கடந்த 1997ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியன்று, மணக்குள விநாயகர் கோவிலுக்கு தானமாக வழங்கினார்.
ஆறு வயது குட்டியாக கோவிலுக்கு வந்த யானைக்கு, தற்போது 28 வயதாகிறது. ’லட்சுமி’ என்று பெயரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்ற இந்த யானை பக்தர்களின் செல்லப் பிள்ளையாக திகழ்கிறது. தினசரி தவறாமல் வந்து ’லட்சுமி’யை பார்த்து, அதற்கு பிடித்தமான அருகம்புல், பழங்களை தந்துசெல்பவர்கள் பலர் உள்ளனர்.கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு ஆசி வழங்கி, அனைவரையும் கவர்ந்துள்ள லட்சுமி யானை, கோவிலுக்கு வந்த தினமான அக்டோபர் 31ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி, அக்டோபர் 31ம் தேதியான நேற்று (அக்., 31ல்) காலை, மணக்குள விநாயகர் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பின், லட்சுமி யானைக்கு திலகமிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. யானைக்கு தீபாராதனை காண்பிக்க, பக்தர்கள் வழிபட்டனர்.கோவில் நிர்வாக அதிகாரி வேங்கடேசன், யானை லட்சுமிக்கு புதிய வஸ்திரம் சார்த்தி, அருகம்புல் மற்றும் பிரசாதத்தை உண்பதற்கு கொடுத்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு லட்சுமி யானை ஆசி வழங்கியது.