பாகிஸ்தான் குருத்வாராவில் 1100 சீக்கியர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2019 12:11
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஞ்சா சாகிப் குருத்வாராவில் இந்தியாவிலிருந்து வந்திருந்த 1100 க்கும் அதிகமான சீக்கியர்கள் வழிபாடு நடத்தினர். அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஹசனாப்தால் நகரத்தில் பழமையான பஞ்சா சாகிப் குருத்வாரா உள்ளது. சீக்கியர்களின் குருவான குரு நானக்கின் கைரேகை தடம் இங்கு இருப்பதாக கருதப்படுவதால் ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளன்று இங்கு ஏராளமான சீக்கியர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.
இதன்படி குரு நானக்கின் 550 வது பிறந்த தின கொண்டாட்டத்தை ஒட்டி பஞ்சா சாகிப் குருத்வா ராவில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வாகா எல்லை வழியாக 1100 க்கும் அதிகமான சீக்கியர்கள் முறையான ‘விசா ’ பெற்று வந்திருந்தனர். இவர்கள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். இதையொட்டி குருத்வாரா பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவிலிருந்து நம் நாட்டின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் வரை 4 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள கர்தார்பூர் சாலையை நவ., 9ல் பாக். பிரதமர் இம்ரான் கான் திறந்து வைக்கவுள்ளார். சீக்கிய குருவான குரு நானக்கின் நினைவிடம் இந்த குருத்வாராவில் உள்ளது. அவரது 550 வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போது நடந்து வருவதால் இந்த குருத்வாராவிலும் விரைவில் சிறப்பு வழிபாடு நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க வரும் சீக்கிய பக்தர்களின் வசதிக்காக இரு நாடுகளின் சார்பிலும் கர்தார்பூர் சாலை அமைக்கப்பட்டுள்ளது.