ஆன்மிக எழுத்தாளர் பரணீதரன். கார்ட்டூன் வரையும் போது ஸ்ரீதர். நாடகம் எழுதும் போது மெரினா. இந்த முப்பரிமாணமும் ஒருவருடையது தான். அவருக்கு காஞ்சி மகாசுவாமிகள் மீது அளவற்ற பக்தி. புகழ் மிக்க எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் எழுதிய ’தி கைட்’ என்ற ஆங்கில நாவலை பரணீதரன் சாகித்ய அகாதெமிக்காக மொழி பெயர்த்தார். அதற்கு சாகித்ய அகாதமி ஆயிரம் ரூபாய் சன்மானம் கொடுத்தது மகிழ்ச்சியடைந்த பரணீதரன் அதில் நூறு ரூபாயை சுவாமிகளுக்கு அர்ப்பணித்து ஆசி பெற விரும்பினார். அப்போது சுவாமிகள் புத்தூரில் இருந்து சித்தூர் செல்லும் பாதையில் உள்ள ’கார்வேட் நகர்’ என்னும் ஊரிலுள்ள குளக்கரையில் தங்கினார். அனுஷத்தன்று மாலையில், சுவாமிகளைத் தரிசித்து நூறு ரூபாயை ஏற்குமாறு வேண்டினார். சுவாமிகள் யோசித்தபடி, ”நீ காரில் தானே இங்கு வந்தாய்? உன் டிரைவரிடம் சொல்லி புத்தூரில் இருந்து நூறு ரூபாய்க்கு தயிர் வாங்கி வரச் சொல்!சூ என்றார்.
சுவாமிகள் தனக்கு ஒரு பணியைக் கொடுத்ததில் டிரைவருக்கு அளவற்ற சந்தோஷம். ஆனால் புத்தூரில் எதிர்பார்த்தபடி தயிர் கிடைக்காததால் காரிலேயே திருப்பதி சென்று நூறு ரூபாய்க்குத் தயிர் வாங்கிக் கொண்டு ஊர் திரும்பினான். அதை அறிந்த சுவாமிகள், ’இந்த தயிருக்கு ஏற்றபடி சோறு வடித்து, மாங்காய், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாம் சேர்த்து தயிர் சாதப் பொட்டலங்கள் தயாரிக்க உத்தரவிட்டார். கடகட என்று தயிர் சாதப் பொட்டலங்கள் தயாராயின. அன்று மக்கள் கூட்டம் சுவாமிகளை தரிசிக்க நிறைய வந்தது. அத்தனை பேருக்கும் பரணீதரன் கையால் தயிர்சாதம் வழங்கச் சொன்னார் சுவாமிகள். மக்கள் வயிறார வாழ்த்தி விட்டுச் சென்றார்கள். ”வசதி ஏதுமில்லாத இந்த இடத்தில் கூட சரியான நேரத்தில் நீ கொடுத்த நுாறு ரூபாயால், எத்தனை பேரின் பசி தீர்ந்தது பார்த்தாயா? அவர்களின் வாய் மட்டுமல்ல வயிறும் உன்னை வாழ்த்தும்?” எனக் கூறி சுவாமிகள் ஆசீர்வதித்தார். பரணீதரன் கண்கள் குளமானது. அத்தனை பேரும் வர இருப்பதை முன்கூட்டியே சுவாமிகள் எப்படி அறிந்தார் என வியந்தார்.