குன்னூர்:குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூ குண்டத் திருவிழா நாளை நடக்கிறது.குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 6ம் தேதி துவங்கியது. தினமும் உபயதாரர்கள் சார்பில் அம்மன் அபிஷேகம், திருவீதி உலா நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்ச்சியான பூ குண்ட திருவிழா நாளை நடத்தப்படுகிறது. மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நற்பணி மன்றத்தின் 38வது ஆண்டு உபயமாக விழா நடத்தப்படுகிறது.காலை 9.00 மணிக்கு வி.பி., தெரு வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்வர். மதியம் 1.00 மணிக்கு டவுன் நகராட்சி ஆரம்பப் பள்ளியில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது; லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் வி.பி., தெரு பழைய லாரி ஸ்டாண்டில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.மாலை 3.00 மணிக்கு பூ குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படவுள்ளது; மாலை 6.00 மணிக்கு பூ குண்ட உற்சவ ஊர்வலம் துவக்கப்படுகிறது; சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கோவிலில் இருந்து மவுண்ட்ரோடு, வி.பி., தெரு வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்படுவார்.இரவு 7.00 மணிக்கு ஐ.யு.டி.பி., காம்ப்ளக்ஸ் பகுதியில் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இரவு 9.00 மணிக்கு அம்மனுக்கு மறு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இரவு 8.00 மணிக்கு குன்னூர் டாக்ஸி ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மேடையில் இன்னிசை கச்சேரி நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நற்பணி மன்றத்தார் செய்து வருகின்றனர்.